அடுத்த மே தினம் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் – அரவிந்தகுமார்
நாட்டின் தேசிய வருமானத்தின் பங்காளிகளான பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சமகால பொருளாதார நெருக்கடிக்கு ஈடு கொடுக்கும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. அதனையே நாமும் வலியுறுத்தி நிற்கிறோம். அடுத்து வரும் மே தினமானது மலையகத்தில் மாற்றங்களை ஏபடுத்தியிருக்க வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மே தினச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மலையகத்தை பூர்வீகமாக கொண்டுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள் இந்திய வம்சாவளியினராக அறியப்படுகின்றனர்.
இந்திய வம்சாவளியினர் என்ற பெயரோடு அவர்கள் இலங்கை திருநாட்டுக்கு பெருவாரியான வருமானத்தை ஈட்டிக் கொடுத்து வருகின்றனர்.
கடந்த 200 வருட காலமாக எமது நாட்டின் தேசிய வருமானத்தில் மிகப்பெரிய பங்களிப்பினை வழங்கிவரும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்றும் பல்வேறு குறைபாடுகளுடனேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பது மிகவும் கவலைக்குரியதாகும்.
இத்தகைய கவலைகள், இன்னல்கள் மற்றும் முட்டுக்கட்டைகளில் இருந்து மலையக சமூகம் விடுபட வேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
சமகால பொருளாதார நெருக்கடியானது மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தில் கணிசமான பாதிப்பினை அல்லது தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இருந்த போதிலும் அவர்கள் தொடர்ச்சியாக நாட்டுக்காக உழைத்து வருகின்றனர்.
ஆகவே, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஏற்ற வகையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை இந்த மே தினம் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை