வெளிநாட்டுச் சக்திகள் கண்டு அஞ்சிய ஒரேதலைவர் எமது ரணில் விக்ரமசிங்க! ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர புகழாரம்
ஐக்கிய தேசிய கட்சி வீழ்ச்சி கண்டிருந்த போதும் கட்சியுடன் இணைந்திருந்தோரே இங்கு அதிகளவில் கூடியிருக்கின்றனர்.1994க்குப் பிறகு ஏறக்குறைய முப்பது வருடங்களாக உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒருவரை கண்டு அஞ்சின. அது தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே. அவரை வீழ்த்த எல்லா வழிகளிலும் முயன்றனர்.
– இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
இந்நாட்டைக் கட்டியெழுப்ப முயன்ற எமது கட்சின் தலைவர்கள் பலரும் எதிர்பாராத விதத்தில் மரணம் அடைந்தனர். பிரேமதாஸ, லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க போன்ற தலைவர்கள் வீதிகளில் கொல்லப்பட்டனர். ஆனாலும் ரணில் விக்ரமசிங்க என்ற ஒரு தலைவர் மிஞ்சி இருந்தமையாலேயே இன்று கொழும்பை சுற்றி இடம்பெறும் மே தினக் கூட்டங்களுக்கு வருவதற்கு மக்களுக்கு எரிபொருள் கிட்டியது. அத்தோடு இன மத பேதங்கள் அற்ற தலைவரான ரணிலை ஆசியாவின் உச்சியில் அமர்த்த வேண்டியது எமது கடமையாகும்.
முழு நாடாளுமன்றமும் அரச செயற்பாடுளில் ஈடுபடும் வகையிலான முறையொன்றை உருவாக்க அவர் முயற்சிக்கிறார். டீ.எஸ். சேனாநாயக்கவும் இந்நாட்டவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டுதான் சுதந்திரத்தைப் பெற்றார். அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீயிட்டாலும் அவர் முடங்கிப் போய்விடவில்லை. அதனால் 2048 என்ற இலக்கை நோக்கி முன்னேறுவோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை