பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க ஒத்துழைப்போம் – காவிந்த

பெருந்தோட்ட மக்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கான சகல முயற்சிகளுக்கு நாம் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

மே தினத்தன்று பதுளையில் இடம்பெற்ற கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் அண்மையில் இடம்பெற்ற போது , ‘மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி மலையகத்திலும் , தலைநகரிலும் இரு மே தினக் கூட்டங்களை நடத்தியதைப் போன்று இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியும் இரு மே தினக் கூட்டங்களை நடத்த வேண்டும். – என்ற கோரிக்கையை வடிவேல் சுரேஷ் முன்வைத்தார்.

அதற்கமைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினுடைய அனுமதியுடன் சமிந்த விஜேசிறி, வேலுகுமார் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் பதுளையில் எமது மே தினக் கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் , இந்த அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கு இதுவரையிலும் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

பேராதனை பல்கலைக்கழகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள கணிப்பீட்டுக்கமைய ஒரு சாதாரண மனிதன் இலங்கையில் தற்போதுள்ள நிலைமையில் தனது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதற்கு நாளொன்றுக்கு 3250 ரூபாவை சம்பளமாகப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதே போன்று இதற்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பொன்றில் எதிர்க்கட்சி தலைவருக்கு பங்குபற்ற முடியாத நிலைமை ஏற்பட்டமையால் , பிரிதொரு சந்தர்ப்பத்தில் அவர் நிச்சயம் அம்மக்களை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் இணக்கம் தெரிவித்துள்ளார். எனவே இந்த விவகாரத்தில் எந்தவொரு சிக்கலும் இல்லை.

இதற்காக வடிவேல் சுரேஷ் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகக் கூறவில்லை. அவர் அவ்வாறு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. எவ்வாறிருப்பினும் பெருந்தோட்ட மக்களின் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கான சகல முயற்சிகளுக்கும் நாம் எமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.