எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்து 32 மீனவர்களுக்கு நட்டஈடு கிடைத்தது! அமைச்சர் காஞ்சன தகவல்
எம்.வி.எக்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் கடல் வளங்களுக்கும், கடற்கரையோரங்களுக்கும் ஏற்பட்ட மாசடைவைக் குறுகிய காலத்துக்குள் தூய்மைப்படுத்தினோம்.
கம்பஹா,கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் நேரடியாக பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்து 32 மீனவர்களுக்கு மொத்தமாக 300 கோடி ரூபா வரை நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது –
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து இடம்பெற்ற காலப்பகுதியில் நான் கடற்றொழில் வளங்கள் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தேன்.இதன்போது மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் கடற்றொழில் வளங்கள் அமைச்சு ஊடாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பொறுப்பற்ற வகையில் தெரிவித்த கருத்துக்கள் நட்டஈடு பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு எங்கு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதை 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்க முடியாது.
துறைசார் நிபுணர்கள் சமர்ப்பித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சட்ட ஆலோசனைகளுக்கு அமைய சிங்கப்பூர் நாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கப்பல் விபத்து தேசிய பிரச்சினையாகக் கருதப்படுகிறது. ஆகவே, இந்த விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது என்பதை உறுதியாகக் குறிப்பிட முடியும்.
இந்த கப்பல் விபத்து விவகாரத்தில் ஒரு துறை மாத்திரம் தனித்து செயற்பட முடியாது. நீதியமைச்சின் தலைமைத்துவத்தில் அமைச்சுக்கள், திணைக்களங்கள், அதிகார சபைகள் உட்பட சகல தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டன.
கருத்துக்களேதுமில்லை