திருகோணமலையில் தாய்லாந்து புத்தர்! தீவிர ஏற்பாடுகள் முன்னெடுப்பு
திருகோணமலை நகரில் நெல்சன் திரையரங்குக்கு முன்னால் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள இடத்தில் 4 அடி உயரமான புத்தர் சிலையொன்று வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிகழ்வில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தாய்லாந்தில் இருந்து புத்தர் சிலை கொண்டுவரப்படுவதோடு 50 பிக்குகளும் பங்கேற்கவுள்ளனர்.
2,700 ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்திலிருந்து திருகோணமலைக்கு வந்து இறங்கியதாகக் கூறப்படும் பிக்குகளை நினைவுகூரும் முகமாகவும், அவர்களைக் கௌரவப்படுத்தும் முகமாகவும் அவர்கள் வந்து இறங்கியதாக மகாவம்சத்தில் கூறப்படும் திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
தாய்லாந்திலிருந்து இன்று (சனிக்கிழமை) திருகோணமலைக்கு வருகை தருகின்ற 50 பிக்குகளும் நிலாவெளியில் விடுதி ஒன்றில் தங்கவுள்ளனர்.
அவர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு கடற்படைதளத்துக்குச் சென்று காந்தி சுற்றுவட்டப் பகுதியில் கடல் வழியாக வந்து இறங்கி பின்னர் பாத யாத்திரை மூலமாக நெல்சன் திரையரங்கு முன்னால் உள்ள 4 அரச மரங்கள் இருக்கின்ற இடத்துக்குச் செல்லவுள்ளனர்.
அங்கு தாய்லாந்திலிருந்து அவர்களால் கொண்டுவரப்படுகின்ற 4 அடி உயரமான புத்தர் சிலையை அவ்விடத்தில் வைத்து ஒரு மணித்தியால பிரித் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அது நிறைவு பெற்றதும் ஜெயசுமராம விகாரைக்குச் சென்று அங்கிருந்து முற்பகல் 11.30 மணியளவில் கண்டி நோக்கிய தாய்லாந்யை அவர்கள் தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்த காலகட்டத்தில், 2005 ஆம் ஆண்டு திருகோணமலை நகரில் புத்தர் சிலை வைக்கப்பட்டமையால் பெரும் கலவரம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை