எந்தவொரு மதத்தினது நம்பிக்கையையும் இழிவுபடுத்த எவருக்கும் உரிமை இல்லை – அருட் தந்தை சிறில் காமினி
எந்தவொரு மதத்தினது நம்பிக்கையை இழிவுப்படுத்துவதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ எவருக்கும் உரிமை இல்லை. நாட்டின் மத ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட் தந்தை சிறில் காமினி வேண்டுகோள் விடுத்தார்.
ஜெரோம் பெர்னாண்டோ என்பவரால் கூறப்பட்ட அடிப்படைவாத கருத்துக்களால் நாட்டின் மத ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும், இவ்வாறான அடிப்படைவாத கருத்துக்களை மக்கள் மத்தியில் திணிப்பவர்கள் குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (16) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
” ஜெரோம் பெர்னாண்டோ என்பவர் கத்தோலிக்க மதகுருவானவரோ அல்லது கத்தோலிக்க திருச்சபைக்கோ எந்த விதத்திலும் தொடர்பு உடையவர் அல்ல. தாம் விரும்பியதொரு மதத்தை பின்பற்றுவதற்கும், மதம் சம்பந்தமான உரைகளை நிகழ்த்துவதற்கும் எவருக்கும் சுதந்திரம் உண்டு. எனினும், அதன் ஊடாக இன்னுமொரு மதத்தை இழிவுப்படுத்துவதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ எவருக்கும் உரிமை இல்லை.
ஜெரோம் பெர்னாண்டோ என்பவருக்கு அனுசரணை வழங்கும் வெளிநாட்டவர்கள் குறித்தும், யார் யாருடன் தொடர்புகளை வைத்துள்ளார் என்பன குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டு வருகின்றன. இவை குறித்து பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் சரியாக தேடிப்பார்க்காமல் இருப்பது அதிசயமாக இருக்கிறது.
ஜெரோம் பெர்னாண்டோ, பெளத்த, இந்து, இஸ்லாம் சகோதர சகோதரிகளின் மனம் நோகும் விதத்திலான மற்றும் மத நம்பிக்கையை இழிவுப்படுத்து கருத்துக்களை வெளியிட்டமை நாட்டின் மத ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற விடயமாகும். அவ்வாறான அடிப்படைவாத கருத்துக்கள் நாட்டின் இன,மத ஐக்கியத்தை சீர்குலைக்கும் செயலாகும். இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
கடந்த காலங்களிலும் இதுபோன்ற அடிப்படைவாதிகளால் கூறப்பட்ட கருத்துக்களால் நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் குறித்து பொது மக்கள் நன்கு அறிவர். ஆகவே, நாட்டின் இன, மத ஒற்றுமைக்கும் நல்லிணக்கித்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் குறித்து பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம்” என்றார்.
ஜெரோம் பெர்னாண்டோ என்பவரின் பின்னால் பலம் பொருந்திய சக்தி இருக்குமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, பலம்பொருந்திய நபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து எமக்கு தெரியாது. அதுபற்றி தேட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் பதிலளித்தார்.
கருத்துக்களேதுமில்லை