அரசு தன்னிச்சையாக செயற்பட முடியாது தனிநபர் பிரேரணையை சமர்ப்பிக்க முடிவு! ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு
பொருளாதார மறுசீரமைப்புக்களில் மக்களின் பங்களிப்பும் , அவர்களது விருப்பமும் காணப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடாகவுள்ளது.
எனவே, இந்த விடயத்தில் அரசாங்கத்தால் தன்னிச்சையாக செயற்பட முடியாது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –
சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்த விவகாரத்தில் குறுகிய அரசியல் நோக்கங்களுடன் நாம் செயற்படமாட்டோம்.
அந்த வகையில் கடந்த திங்களன்று நாணய நிதிய தூதுக்குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஊழல் , மோசடிகளை ஒழித்து நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
எனினும் அரசாங்கத்தின் தற்போது பொருளாதார மேம்பாட்டு கொள்கை திட்டத்தில் பொருளாதார வளர்ச்சி வேகம் 3 சதவீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 வீதம் வளர்ச்சி வேகத்தைக் கொண்டு எதனையும் செய்ய முடியாது. அதே வேளை மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நிபந்தனைகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்களில் மக்களின் பங்களிப்பும் , அவர்களின் விருப்பமும் காணப்பட வேண்டும் என்பதே நாணய நிதியத்தின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
நாட்டை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு அப்பால் மக்கள் ஆணை கொண்ட அரசாங்கம் காணப்பட வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
எனவே மறுசீரமைப்பு விவகாரங்களில் அரசாங்கத்தால் தன்னிச்சையாக செயற்பட முடியாது. இதனை வலியுறுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படும்.
அத்தோடு நான்கு ஆண்டுகள் நீடிக்கப்பட்ட கடனுதவி திட்டத்தை வழங்குவதன் மூலம் இலங்கையில் நாணய நிதியம் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன என்பது தெளிவில்லாமலுள்ளது என்பதையும் அவர்களிடம் நேரடியாகத் தெரிவித்தோம். – என்றார். (5)
கருத்துக்களேதுமில்லை