மலையகம் 200 நிகழ்வு நுவரெலியாவில் ஆரம்பம்
மலையகம் 200 வரலாற்றை சிறப்பிக்கும் வகையில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம்,மலையக தமிழர் மரபு ஆகியவை நுவரெலியாவில் ஒழுங்கு செய்திருந்த மூன்று நாள் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமானது.
கண்டி சமூக அபிவிருத்தி நிறுவக நிறைவேற்று பணிப்பாளர் பி.முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் மலையக அரசியல் பிரமுகர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமார், வேலுகுமார், சமூக அமைப்புகள், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன உறுப்பினர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், பெருந்தோட்ட தொழிலாளர்கள் உள்பட நாட்டில் பல பாகங்களிலும் இருந்து அதிகளவானர்கள் கலந்து கொண்டனர்.
நுவரெலியாவில் ஆரம்பமாகியுள்ள மலையகம் 200 நிகழ்வு 19,20,21 ஆகிய தினங்களில் தொடர்ச்சியாக காலை 09 மணி முதல் மாலை 05 மணிவரை இடம்பெறவுள்ளது.
இந்திய வம்சாவளிகளாக இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்களாக 1823 ஆம் ஆண்டு முதல் இப்போது 2023 ஆம் ஆண்டு நவரை 200 வருட கால வரலாற்றை கொண்டு வாழும் மலையக மக்களை நினைவு கூர்ந்து கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் நுவரெலியாவில் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளது.
நுவரெலியா சினிசிட்டா உள் அரங்கு மற்றும் வெளியரங்கில் பல விசேட நிகழ்வுகளை நடத்த நிறுவகம் ஏற்பாடுகள் செய்துள்ளது.
இந்த விசேட நிகழ்வுகளில் மலையக மக்களின் வாழ்வியல் வரலாறு, அரசியல், பொருளாதாரம், தொழில் மற்றும் உரிமைகள் போன்ற விடயங்களை வெளிக்காட்டும் வகையில் ஆய்வரங்கு, தோட்ட தொழிலாளர்களின் அருங்காட்சிய கண்காட்சி போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன் வீட்டு உரிமை, காணி உரிமை, தபால் சேவை, அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் சேவைகள் உட்பட பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகள் அதிகரிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கையொப்பம் திரட்டல் மற்றும் மகஜர் சமர்ப்பித்தல் நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
கருத்துக்களேதுமில்லை