மலையக மக்கள் உரிமைகள் பெறும்வரை நாம் அஹிம்சை வழியினில் போராடுவோம்! மனோனணேசன் சபதம்
கடந்த 200 வடங்களுக்கு முன் இந்த நாட்டில் குடியேறிய எமது மக்கள் பல துன்ப துயரங்களை அனுபவித்து நாட்டை பொன் விளையும் பூமியாக மாற்றி காண்பித்துள்ளார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார் கடந்த 1948 ஆம் ஆண்டு வெள்ளையர்களிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றுவிடோம் என்று. ஆனால் நான்கூற விரும்புவது என்னவென்றால் நாங்கள் வெள்ளையருக்கு சுதந்திரம் கொடுத்து அனுப்பி வைத்தோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நுவரெலியாவில் நடைபெற்ற ‘மலையகம் 200’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பொழுது கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் –
அன்று ஆசியா கண்டத்தில் ஐப்பானுக்கு அடுத்தபடியாக அந்நிய நாட்டு வருமானம் இருந்த நாடு இலங்கைதான்.
இன்று இந்த நாட்டில் டொலர் இல்லை. ஸ்டேலிங் பவுண்ஸ் இல்லை. இதற்கு யார் காரணம் நமது உழைப்பிற்கு அரசாங்கம் உரிய இடம் வழங்கவில்லை.
அன்று இந்த நாட்டில் வெளிநாட்டு வருமானம் அதிகமாக இருந்தபடியால் சிங்கப்பூர், மலேசியா ஸ்தாபகர்கள் எமது நாட்டைப் பாராட்டினார்கள் அதற்கு காரணம் எமது மக்களின் உழைப்பு.
அவ்வாறு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக உழைத்த எமது மக்களின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்து அரசியல் அநாதைகளாக்கப்பட்டார்கள்.
நாங்கள் பிரஜாவுமை இழந்து வாக்குரிமை இழந்து அப்பொழுதும் நாங்கள் உழைத்துக்கொண்டிருந்தோம்.
கடந்த 1964 ஆண்டில் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தை எங்களையும் எங்களது மக்களையும் கேட்காமலே செய்துகொண்டார்கள்.
அந்த ஒப்பந்தத்தின்படி எமது மக்களை ஆடு மாடுகளை போல இந்தியாவிற்கு அழைத்து சென்றார்கள்.
இந்திய அரசாங்மும் இலங்கை அரசாங்கமும் அன்று எமது மக்களுக்கு செய்த அநியாயத்தை நாங்கள் இன்னும் மறக்கவில்லை. அன்று எமது மக்களை நாடு கடத்தாமல் இருந்திருந்தால் இன்று நாடாளுமன்றத்தில் இந்தியவம்சாவளி மக்கள் சார்பில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள்.
எங்களின் வளர்ச்சியில் பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டது. ஆனால் நாங்கள் கூறுவது எங்களது சமூகத்தை தேசிய இனமாகப் பிரகடனப்படுத்த வேண்டும்.
இந்த நாட்டில் வாழும் வடக்கு, கிழக்கு மக்கள், முஸ்லிம் மக்கள், சிங்கள மக்கள் ஆகிய மக்களுடன் மலையக இந்தியவம்சாவளி மக்களும் இணைத்துகொண்டால்தான் அது இலங்கை நாடு எங்களை ஒதுக்கி வைத்தால் இலங்கை நாடு என ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களையும் ஒரு தனி தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். (05)
மலையக மக்கள் குடியேறி 200 வருடங்ளாகிவிட்டது. எங்களுக்கு உரிமை இல்லையென்று ஒப்பாரி வைக்கமாட்டோம். எமது மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் வரை நாம் அஹம்சை வழியில் போராடுவோம். – எனக் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை