300 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள்

இலங்கை முழுவதிலும் உள்ள 25 மாவட்டங்களைச் சேர்ந்த 300 உயர்தரப் மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோரால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு மாணவருக்கு 2,500 ரூபாய் வழங்கப்படவுள்ளது. கொவிட் தொற்று காரணமாக இந்த ஆண்டு 2021 – 2022 என இரு தொகுதி மாணவர்களுக்கும் ஒரே சந்தர்ப்பத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசிலைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு இதன் போது வாழ்த்து தெரிவித்த உயர் ஸ்தானிகர், இரு நாடுகளிலும் உள்ள இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக கல்வித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய கலாசாரத் தொடர்புகளை எடுத்துக்காட்டிய அவர் , இந்தியாவில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

எதிர்காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இலங்கையின் இளம் தலைமுறையினர் பெரும் பலமாக இருப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, மகாத்மா காந்தி புலமைப்பரிசில் மட்டுமல்லாமல், மேலும் பல புகழ்பெற்ற நிறுவனங்களில் பல்வேறு உதவித்தொகைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கியதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த முயற்சிகள் இலங்கையின் மனித வள வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததாகவும் , மாணவர்களுக்கான பாடப் புத்தகம் அச்சிடுவதற்கான ஆதரவை வழங்கியதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.