வெளிப்படைத் தன்மையுடன் அரசாங்கம் செயற்பட்டால் ஒத்துழைப்பு வழங்கதயார்!  சம்பிக்க பகிரங்கம்

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண சகல எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடும் அரசாங்கம் முதலில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும். மக்களால் புறக்கணிக்கப்படும் ராஜபக்ஷர்களை ஒன்றிணைத்துக்கொண்டு முன்னேற்றமடைய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு –

ராஜபக்ஷர்களின் குறிப்பாக முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தவறான பொருளாதார முகாமைத்துவக் கொள்கையால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. 75 வருடகாலமாக நாட்டை ஆட்சி செய்த அரச தலைவர்கள் பொருளாதாரப் பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டும் எனக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

75 வருட கால ஆட்சியாளர்கள் எவரும் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் பத்து ஆண்டுகால ஆட்சியில் பயனற்ற அபிவிருத்திகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டன.

ராஜபக்ஷர்கள் தமது பெயரைப் பதிவுசெய்ய வேண்டும் என்பதற்காக கடன் பெற்று அபிவிருத்திகளை முன்னெடுத்தார்கள். இறுதியில் நாடு பாரிய கடன் சுமைகளை மாத்திரம் எதிர்கொண்டது.

2019 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷர்கள் குறுகிய காலத்துக்குள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி ஒட்டுமொத்த மக்களையும் கடனாளியாக்கியுள்ளார்கள். பொருளாதாரப் பாதிப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து சமூகக் கட்டமைப்பில் நிலவிய பிரச்சினைகளுக்கு சற்று தீர்வு காணப்பட்டுள்ளது.

பொருளாதாரப் பாதிப்புக்குத் தீர்வு காண சகல எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.

எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெற முன்னர் அரசாங்கம் முதலில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு தொடர்பான பல விடயங்கள் நாடாளுமன்றத்துக்கு முழுமையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆகவே, அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டால் ஒத்துழைப்பு வழங்கத் தயார். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.