திருகோணமலையில் குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

திருகோணமலை பகுதியில் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புல்மோட்டை நிலாவெளி, சம்பல் தீவு மற்றும் ஆனந்தகுளம் ஆகிய பகுதிகளை இணைக்கும் குடிநீர் விநியோகத்துக்கான குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

67.3 மில்லியனுக்கும் அதிகமான நிதி உதவியின் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம் 28 கிலோ மீற்றர் பரப்பை கொண்டது.

இந்தத் திட்டம் நிறைவடைந்தவுடன் 300 இற்கும் அதிகமான புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதுடன், திருகோணமலை நகரம் மற்றும் அதை அண்டியுள்ள கிராம பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்காகவே இந்தத் திட்டம்  மேற்கொள்ளப்படுகின்றது.

இதேவேளை, திருகோணமலை, கந்தளாய் ஆகிய நகரங்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்துக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

தற்போதைய நிலைவரம் மற்றும் விஸ்தரிப்புக்கான தேவைப்பாடுகள் பற்றியும் கேட்டறிந்துகொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஷ்வரன், கபில அத்துகோரல, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் சஞ்சீவ விஜேகோன், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதி பொது முகாமையாளர் எம்.எம்.நசீல், உதவி பொது முகாமையாளர் டீ.ஏ.பிரகாஷ், பிராந்திய முhகமையாளர் பீ.சுதாகரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.