படையினருடன் புலிகளை ஒன்றிணைப்பது கோழைத்தனம்; நினைவுத்தூபி அமைக்கும் முடிவு கைவிடப்பட வேண்டும்!  சரத் வீரசேகர ஆவேசம்

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படையினரையும், விடுதலைப் புலிகளையும் ஒன்றிணைத்து  நினைவுகூரும் வகையில் தூபி அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை கோழைத்தனமானது.

அரசாங்கத்தின் தீர்மானத்தையிட்டு வெட்கமடைகிறேன். தீர்மானம் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற உற்பத்தி (விசேட ஏற்பாடுகள்) வர்த்தமானி கட்டளைகள் மீதான விவாதத்தின் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் ‘நினைவு தூபி’ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது.இதனை நல்லிணக்கம் என்று குறிப்பிடக் கூடாது. கோழைத்தனமான செயற்பாடு என்றே குறிப்பிட வேண்டும்.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த முப்படையினரையும், விடுதலை புலிகள்  அமைப்பினரையும் எவ்வாறு ஒருமித்து பார்க்க  முடியும். நாட்டில் அரசமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவே முப்படையினர் போராடினார்கள்.விடுதலை புலிகள் அமைப்பினர் நாட்டுக்கு எதிராக செயற்பட்டார்கள்.

முப்படையினரையும்,விடுதலை புலிகளையும் ஒருமித்து பார்க்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தையிட்டு வெட்கமடைகிறேன்.ஆகவே நினைவுத் தூபி அமைக்கும் தீர்மானத்தை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

திருகோணமலை மாவட்டத்தில்  சியாம் நிகாய மத வழிபாட்டுக்கு தமிழ் அரசியல்வாதிகள் காரணமின்றித் தடையேற்படுத்துவார்களாயின் பாரிய அழிவு ஏற்படும் என்று நான் குறிப்பிட்ட கருத்தின் நோக்கத்தை அறியாமல்  நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்களையிட்டு கவலையடைகிறேன்.

இலங்கை தேரவாத பௌத்த நாடு என்பதை மறுக்க முடியாது. நாடு முழுவதும் பௌத்த சின்னங்கள்  உள்ளன. இதன் காரணமாகவே இலங்கை பௌத்த நாடு என்று குறிப்பிடுகிறோம். அதனை விடுத்து இனவாத அடிப்படையில் இலங்கை பௌத்த நாடு என்று குறிப்பிடவில்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.