முக்கிய பிரமுகர்கள்’ மேற்கொள்ளும் ஊழல் மோசடிகளின் ஓரங்கம் ரஹீம்! கரு ஜெயசூரிய அதிருப்தி
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் செயற்பாடு, நாட்டின் முக்கிய பிரமுகர் என அழைக்கப்படும் சில தரப்பினரால் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஊழல்மோசடிகளின் ஒரு பகுதியேயாகும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு –
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர் 7 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான மூன்றரை கிலோகிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுகள், ஆபரணங்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவந்தபோது கைதான சம்பவத்தை நாம் மிகவும் பாரதூரமான விடயமாகவே கருதுகின்றோம்.
இது தொடர்பில் விசனமடையும் அதேவேளை, நாடு என்ற ரீதியில் வெட்கப்படவேண்டிய விடயமாகவும் நாம் இதனைக் கருதுகின்றோம்.
‘கௌரவ உறுப்பினர்’ என்று விழிக்கப்படும் ஒருவர் நாட்டின் முதன்மை விமானநிலையத்தின் முக்கிய பிரமுகர்களுக்கான முனையத்தைப் பயன்படுத்திச் செய்திருக்கும் இந்தச் செயலானது, நாட்டின் முக்கிய பிரமுகர் என அழைக்கப்படும் சில தரப்பினரால் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஊழல்மோசடிகளின் ஒரு பகுதி என்றே நாம் நம்புகின்றோம்.
இந்தச் செயலின் விளைவாகக் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையும் இழிவுபடுத்தியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் கண்ணியம் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம்வகிப்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, இவர்களைப்போன்ற நபர்களின் செயல்களால் கண்ணியம் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் இழிவுபடுத்தப்படுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மேலும் இந்தச்செயலை வெறுமனே சுங்கச்சட்டத்தை மீறிய செயலாக மாத்திரம் கருதமுடியாது. இதனூடாக நாட்டின் அந்நியச்செலாவணி சட்டங்களும் மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்துக் கவனம்செலுத்தவேண்டும். அவ்வாறு மீறப்பட்டிருப்பின், அது பாரிய குற்றமாகும்.
ஆகையால் நாட்டின் பொறுப்புடைய தரப்புக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டிய அதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரின் தகுதி, தராதரங்களைப் பாராமல் சட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியமாகும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை