ஒஸ்மானியாக் கல்லூரியின் மோதல் விவகாரம்: பொலீஸ் நடவடிக்கைக்குட்படுத்தி விசாரணை!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பயிற்சி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே இடம்பெற்ற மோதல் அசம்பாவிதம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்துக்கும் – யாழ்ப்பாணம் வலயக் கல்வி பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், இடம்பெற்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான இருதரப்பு மோதல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு அமைவாக ஆசிரியர் மற்றும் பாடசாலை இரு தரப்பினரையும் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறும், வலயக்கல்வி அலுவலகத்தால் மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்துக்கு இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்றும், மேற்படி பொலீஸார் மற்றும் மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களம் இணைந்து உரிய சட்ட விசாரணைகளை முன்னெடுத்து முறையான தீர்மானம் ஒன்றை நீதிமன்றிற்கு ஊடாக முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அந்த வகையில் மோதலுடன் தொடர்புடைய பயிற்சி ஆசிரியர் அவர் தரப்பிலும், பாடசாலை சார்பில் அதிபர் தரப்பிலும் பொலீஸில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதே நேரம் ஆசிரியர்களிலும் ஒரு சிலர் தமது சொந்த விருப்பத்தில் இடமாற்றத்தை கோரி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலமான கடிதம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது. இது தொடர்பில் தான் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வலயக் கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஆசிரியர்கள் தொடர்பான ஒரு சில விவகாரங்கள் தொடர்பிலும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டுவந்தது. இது தொடர்பில் தனக்கு எழுத்து மூலம் அறிக்கை சமர்பிக்குமாறு பணிப்பாளர் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.