உருத்திரபுரம் சிவன் கோவிலின் அளவீட்டுப் பணிகள் நிறுத்தம் குருந்தூர்மலையில் மேலதிக காணிகள் கையகப்படுத்தப்படாது! அமைச்சர் விதுர உறுதி

உருத்திரபுரம் சிவன் கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதி அளித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கும் இடையில் பத்தரமுல்லயில் அமைந்துள்ள அமைச்சின் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு உறுதி அளித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலையரசன் மற்றும் குலசிங்கம் திலீபன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

உருத்திரபுரம் சிவன் கோவில், வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, குச்சவெளி விகாரைகள், தையிட்டி விகாரை, ஆனையிறவிலும் கிளிநொச்சி நகரிலும் புதிய விகாரை அமைப்பதற்கான முன்னெடுப்புகள், பரந்தன் சந்தி புத்தர் சிலை, கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு அண்மையில் விகாரை அமைத்தல் மற்றும் பூநகரி விகாரை உள்ளிட்ட விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இந்தச் சமயத்தில் தொல்பொருளியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பில் தன்னால் தயாரிக்கப்பட்ட ஆவணத்ரா நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அமைச்சரிடத்தில் கையளித்தார்.

இதன்போது புனித பூமிகளுக்குரிய காணிகளை பொதுமக்கள் கையகப்படுத்த முனைவதாலேயே அவ்விடங்களை தாம் அளவீடு செய்வதாக தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டதை உடனடியாகவே மறுத்துரைத்த சிறீதரன் எம்.பி., எங்கள் மக்கள் அத்தகைய செயல்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை எனவும் பொய்யுரைகளை பரப்பி மதப் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடாமல், எமது மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று மிகக் காட்டமாக தெரிவித்திருந்தார்.

நீண்ட நேர விவாதத்தின் பின்னர் உருத்திரபுரம் சிவாலயத்தில் தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதற்கு, இது தொடர்புடைய திணைக்களங்களுக்கு உத்தரவு பிறப்பிப்பதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதியளித்தார்.

குருந்தூர் மலை மற்றும் வெடுக்குநாறி மலை விவகாரங்கள் தொடர்பில் அவற்றின் வழக்குத் தீர்ப்புகளின் பின்னர், விசேட கலந்துரையாடலை ஒழுங்குசெய்து தீர்மானங்களை மேற்கொள்வதாகவும், தையிட்டி விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டதேயன்றி, அதற்கும் தொல்லியல் திணைக்களத்துக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தார்.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ், குருந்தூர் மலை ஆக்கிரமிப்புக்கு அப்பால் அப்பகுதியில் உள்ள காணிகள் அபகரிக்கப்படுகின்றன. அதற்கு தொல்பொருளியல் பணிப்பாளர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.

இதன்போது, வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு உரித்தான காணிகளையே கையகப்படுத்துவதாக கூறிய பணிப்பாளர் பின்னர், அதற்குள் தொல்பொருள்கள் காணப்படலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் கூறினார்.

அச்சமயத்தில் குறுக்கீடு செய்த சார்ள்ஸ் எம்.பி, நீங்களும் பொலிஸார் போன்று தொல்பொருள்களை வைத்து காணிகளைப் பிடிக்கப்போகின்றீர்களா எனக் கேட்டார்.

அப்போது, குருந்தூர் மலையில் கட்டப்பட்டது விகாரை அல்ல என்ற தொனிப்பட பணிப்பாளர் கருத்துக்களை வெளியிட முற்பட்டபோது, குறுக்கீடு செய்த சார்ள்ஸ், அப்படியென்றால், வெடுக்குநாறி மலையில் சொந்த பணத்தில் கோவிலைக் கட்டவா என்றும் கேள்வி எழுப்பினார்.

அச்சமயத்தில், அமைச்சர் விதுர பணிப்பாளருக்கு கடுமையான தொனியில், அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட பணிகளை செய்ய வேண்டாம் எனக் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.