தமிழர் ஆசிரியர் சங்க பொதுசெயலர் சரா.புவனேஸ்வரன் ஓய்வுபெறுகிறார்!

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கௌரவ பொதுச் செயலாளராக பன்னிரெண்டு ஆண்டுகள் அரும்பணியாற்றிய சரா.புவனேஸ்வரன் வரும் 31.05.2023 உடன் ஓய்வு பெறுகின்றார்.

கடந்த 21.05.2023 அன்று திருகோணமலையில் உள்ள மூதூர் பிரதேசத்தின் ஈச்சிலம்பற்று சண்பக மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சபைக்கூட்டத்தில் நடைபெற்ற புதிய நிர்வாக சபைத் தெரிவோடு பொதுச்செயலாளர் பொறுப்புக்களை ஒப்படைத்து தனது ஓய்வை அறிவித்தார்.

2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஏகமனதாக பொதுச்செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட சரா.புவனேஸ்வரன், அதன் பின்னர் பண்டாரவளை, திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்  ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் தொடர்ந்தும் பொதுச் செயலாளரானார்.

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளராக இருந்த காலத்தில் பொதுச் செயலாளரான இவர் பல்வேறு பணிகளைச் சிறப்பாக செய்து முடித்தவர்.

இவரது பணி இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்துக்கு அவசியமானது என்பதால் சங்க நிர்வாகிகளால் தொடர்ந்தும் சங்கத்தின் ஆலோசகராக இருப்பதற்கு ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவரோடு சங்கத்தின் ஆலோசகராக மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் தலைவர் க.நல்லதம்பியும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு ஏற்கனவே சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர்களாக முன்னாள் பொதுச் செயலாளர் த.மகாசிவம், சர்வதேச பெண்கள் வலையமைப்பின் ஆலோசகர் திருமதி ஈ.ஜெ.மகேந்திரா ஆகியோர் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்றைய கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக மட்டுநகரைச் சேர்ந்த க.நிரஞ்சனும், பொதுச்செயலாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி.கணேசலிங்கமும், நிதிச் செயலாளராக யாழ் வடமராட்சியைச் சேர்ந்த கி.இந்திரனும், நிர்வாகச் செயலாளராக மட்டக்களப்பைச் சேர்ந்த சி.சசிதரனும், பத்திரிகைச் செயலாளராக திருகோணமலையைச் சேர்ந்த ம.சச்சிதானந்தமும், பிரசார செயலாளராக மலையகத்தைச் சேர்ந்த அ.பாலசிங்கமும், கல்வி கலாசார செயலாளராக புத்தளத்தைச் சேர்ந்த தெ.சுதர்சனும் தெரிவு செய்யப்பட்டனர்.

துணைத் தலைவர்களாக திருகோணமலையச் சேர்ந்த இரா.சச்சிதானந்தமும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ம.சசிகுமாரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  செல்வி க.வளர்மதியும், மன்னாரைச் சேர்ந்த திருமதி அனுலா நிக்ஷன் சொய்ஷாவும் தெரிவு செய்யப்பட்டதோடு, துணைப் பொதுச் செயலாளர்களாக கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெ.நிஷாகரும், மன்னாரைச் சேர்ந்த பி.ஈ.குருஸும், மட்டக்களப்பைச் சேர்ந்த திருமதி வி.சிவசங்கரியும், துணை நிதிச் செயலாளர்களாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செ.சிவபாலசுந்தரும், திருமதி ஜெ.சசிலேகாவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

அத்தோடு மாகாண தலைவர்கள், செயலாளர்கள் மாவட்டங்களின் தலைவர்கள், செயலாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இத்தகவல்களை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் புதிய பொதுச் செயலாளர் சி.கணேசலிங்கம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.