கல்பிட்டியில் 630 கிலோ பீடி இலைகளுடன் வான் ஒன்றைக் கைப்பற்றினர் பொலிஸார்!
சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய பொதிகள் வானில் ஏற்றிச்செல்லப்பட்ட போது பொலிஸார் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கல்பிட்டி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜீவ டி சொய்சா தலைமையில் தலவில பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பீடி இலைகள் வான் ஒன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட நிலையில், அந்த வானை பொலிஸார் துரத்திச் சென்றபோது, அதிலிருந்த சந்தேக நபர் வானை அகர அனுவ பிரதேசத்தில் கைவிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வானிலிருந்து 630 கிலோ பீடி இலைகளை பொலிஸார் மீட்டுள்ளதுடன், வானையும் மீட்கப்பட்ட பொருளையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட பீடி இலைகள் கல்பிட்டியிலிருந்து புத்தளம் நோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது
கருத்துக்களேதுமில்லை