கல்முனையில் சுற்றாடல் வார வேலைத் திட்டங்கள் ஆரம்பம்

தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபை ஒழுங்கு
செய்திருந்த மர நடுகை நிகழ்வு, செவ்வாய்க்கிழமை மாநகர ஆணையாளர்
ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கல்முனை மாநகர சபையின் பிரதான அலுவலக வளாகத்திலும் சிறுவர்
பூங்காக்களிலும் மரங்கள் நடப்பட்டன.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம்,
பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன் உட்பட
உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைவாக மே மாதம் 30 ஆம்
திகதி முதல் ஜூன் மாதம் 05 ஆம் திகதி வரையான காலப்பகுதி தேசிய சுற்றாடல்
வாரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றாட வாரத்தில் ஒவ்வொரு நாளும் முறையே மர நடுகை தினம், வளி
மாசடைதல் தாக்கங்களைக் குறைக்கும் தினம், சுற்றாடல் சுத்தப்படுத்துகை
தினம், உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பு தினம், நீர் மூலாதாரங்களைப்
பாதுகாக்கும் தினம், பேண்தகு காணி முகாமைத்துவ தினம், பிளாஸ்ரிக் கழிவு
முகாமைத்துவ தினம் மற்றும் சர்வதேச சுற்றாடல் தினக் கொண்டாட்டம் என
நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

கல்முனையிலும் இந்நிகழ்வுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மாகாண
முதலமைச்சின் செயலாளரது சுற்று நிருபத்திற்கமைவாக உள்ளூராட்சி ஆணையாளரின்
ஆலோசனையின் பேரில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி,
சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.