ஊடகத்துறைக்கு சில சட்டங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாம்! வஜிர அபேவர்தன விடாப்பிடி

ஊடகத்துறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின் சில சட்டங்களை கொண்டுவர வேண்டியது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

ரூபவாஹினி அலைவரிசையை 1978 இற்குப் பின்னர் நாட்டில் அறிமுகப்படுத்தியபோது, இது தேச விரோதமான செயற்பாடாகும் என பலரும் எதிர்ப்பை வெளியிட்டார்கள்.

இதனால் சமூகம் சீரழியும் என்றும் தெரிவித்தார்கள். ஆனால், அதனைக் கருத்திற் கொள்ளாமல்தான் ஜே.ஆர். ஜயவர்த்தன அலைவரிசையை ஆரம்பித்தார்.

அன்று எதிர்ப்பை வெளியிட்டவர்களின் பிள்ளைகள், இன்று தொலைக்காட்சிகளின் பிரதானிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.

சிங்கப்பூர், மலேசியா, சீனா மற்றும் ஐரோப்பா நாடுகளில் காணப்படும் ஒளிபரப்பு ஒழுங்குச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முதலில் தெளிவடைய வேண்டும்.

சிங்கப்பூரில் பத்திரிகைச் செய்திகளை காலையில் வாசிக்கலாம். ஆனால், பத்திரிகையில் உள்ளதைத் தவிர வேறு ஏதேனும் கருத்துக்களை குறித்த தொகுப்பாளர் கூறினால் 100 சிங்கப்பூர் டொலரளவில் அபராதம் விதிக்கப்படும்.

ஊடக நிறுவனங்களுக்கு கருத்துச் சுதந்திரம் உள்ளது. அதேநேரம், வெறுப்புப் பேச்சுக்களை வெளிப்படுத்தவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்றும் சீனாவை போன்று மாற்ற வேண்டும் என்றும் ஐரோப்பா போல மாற்ற வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள்.

அப்படியானால், சில சட்டங்களை நாம் கொண்டுவரத்தான் வேண்டியுள்ளது.

இது தொடர்பாக நாம் மக்களுக்கு மெதுவாக தெரியப்படுத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.