உள நோயாளியாக மாறுகிறார் அலி சப்ரி! சிறிதரன் எம்.பி. காட்டம்

ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலை என்பது இலங்கையின் வாழும் தமிழ்மக்கள், புலம்பெயர் தேசங்களில் வாழும் இலங்கைத் தமிழ்மக்கள் மற்றும் இந்தியவாழ் தமிழ்மக்கள் ஆகிய முத்தரப்பினரின் முயற்சிகளை அடிப்படையாகக்கொண்டது என்று தாம் உறுதியாக நம்புவதாகவும், எனவே இவ்வாறானதொரு பின்னணியில் அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டுள்ள கருத்தைக் கடுமையாகக் கண்டித்து நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.


புலம்பெயர் தமிழர் தொடர்பான வெள்ளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கு கண்டனம் வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், இதுபற்றி மேலும் கூறுகையில் –

இலங்கையில் மீண்டுமொரு மோதல் உருவாகவேண்டும் என்ற புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்கள் ஒருபோதும் விரும்பவில்லை. மாறாக, அவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வையே கோருகின்றனர். அவ்வாறிருக்கையில் வெளிவிவகார அமைச்சராகப் பதவிவகிக்கக்கூடிய அலி சப்ரியின் வெளிநாட்டுப்பயணங்களின்போது, இவ்விடயம் பற்றிய அழுத்தங்கள் மிகவும் வலுவானதாக மாறிவருகின்றன. அந்த அழுத்தத்தைப் பொறுத்துக்கொள்ளமுடியாமல்தான் அண்மையில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பில் ருவிட்டர் பதிவொன்றைச் செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கருத்தையும் பார்க்கவேண்டியிருக்கின்றது. அவர் படிப்படியாக உளநோயாளியாக மாறிவருகின்றார். முன்னாள் போராளிகளைப்போன்று அவருக்கும் புனர்வாழ்வு மற்றும் உளவள ஆலோசனை ஆகியவற்றை வழங்கவேண்டியிருக்கின்றது. அதன்மூலமாகவேனும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மோதலின் பின்னரான இன ஐக்கியம் ஆகியவற்றின் உண்மையான தாற்பரியம் குறித்தும் அவற்றை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியும் அவர் அறிந்துகொள்ளட்டும்.

எமது நாட்டின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் இன சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒரே நேர்கோட்டில் ஒருமித்துப் பயணிக்கக்கூடாது என்பதில் அரசாங்கங்கள் கவனமாக இருந்துவந்திருப்பதுடன் அதில் வெற்றியும் கண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசாங்கத்தால் அமைச்சர் அலி சப்ரியும் ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகின்றார் என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.