இந்து சமுத்திர வலய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த அனைத்து பங்குதாரரும் ஆக்கபூர்வமாக கருத்தாடவேண்டும்!  சாகல ரத்னாயக்க தெரிவிப்பு

இந்து சமுத்திர வலயத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பங்குதாரர்களும் சாதகமான பேச்சில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின்  பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற 20 ஆவது ஷங்ரிலா உரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

ஆசியாவின் பிரதான பாதுகாப்பு மாநாடுகளில் ஒன்றான ஷங்ரிலா உரையாடலில் சிங்கப்பூரில் ஜூன் 2 ஆம்  திகதி முதல் 4 ஆம் திகதி வரை நடைபெற்றது.

ஜூன் 2ஆம் திகதி  ஆரம்பமான இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியப் பிரதமர்  அன்டனி அல்பனீஸ் தலைமையுரை ஆற்றியதோடு இந்தியா, ஓமான், பிரான்ஸ், பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நிலையான மற்றும் சமநிலையான ஆசிய-பசுபிக் பிராந்தியத்தை உருவாக்குதல், பிராந்திய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, ஆசியாவில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல், இந்து-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான புவிசார்-அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இந்த உச்சிமாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்புச் செயற்பாடுளை மையப்படுத்தி உரையாற்றிய சாகல ரத்நாயக்க, இந்து சமுத்திர வலயத்தை  அமைதி வலயமாகப் பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை மேற்கொண்ட முயற்சிகளையும்  தெளிவுபடுத்தினார்.

பெரும் வல்லரசுகளின் போட்டி மற்றும் வெளி மோதல்களை இந்து சமுத்திரத்தில் இருந்து விலக்கி வைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், கப்பல் மற்றும் விமானப் பயண சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் இலங்கையின் பங்களிப்பை விளக்கினார்.

இதேவேளை, ஷங்ரிலா உரையாடலில் கலந்துகொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்  விவியன் பாலகிருஷ்ணன் உட்பட பல உயர்மட்ட இராஜதந்திரப் பிரதிநிதிகளுடன்  சாகல ரத்நாயக்க  பேச்சு நடத்தினார்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்திய  சாகல ரத்நாயக்க, கடந்த சவாலான காலகட்டத்தில் சிங்கப்பூர் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் துறைமுகம் மற்றும்  விநியோகத் துறைகள் தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக கவனம் செலுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாளர்  கிரெக் மொரியாட்  மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலில் கடல்சார் பாதுகாப்பு, மனிதக் கடத்தலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் கூட்டுப் பணியாளர் குழுவின் தலைவர் ஜெனரல் சஹீர் ஷம்ஷாத் மிர்சா மற்றும்  சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பிராந்திய  ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

மேலும்,  சாகல ரத்நாயக்க மற்றும் அமெரிக்காவின் இந்து-பசுபிக் கட்டளைத் தளபதி  அட்மிரல் ஜோன் அக்விலினோ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில், இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும்  சாகல ரத்நாயக்க விளக்கமளித்தார் .

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் திருமதி கிறிஸ்டின் சிபொல்லாவுடன் இடம்பெற்ற சந்திப்பில், பிராந்தியம் தொடர்பான மனிதாபிமானப் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டதுடன், அவ்வாறான சவால்களை எதிர்கொள்ள இலங்கையின் அர்ப்பணிப்பையும்  சாகல ரத்நாயக்க வலியுறுத்தினார்.

சாகல ரத்நாயக்க மற்றும் இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  விக்ரம் மிசிறி ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குத் தேவையான வழிமுறைகள் தொடர்பில் பரவலாகக் கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, இந்த மாநாட்டுடன் இணைந்தாக சாகல ரத்நாயக்க மற்றும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர்  ஒலெக்ஸி ரெஸ்னிகோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி என்க் ஹென்   நடத்திய இரு வட்ட மேசைக் கலந்துரையாடல்களிலும்  சாகல ரத்நாயக்க பங்கேற்றார்.  வலயத்தின் பிரதான பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டதோடு இதில் ஷங்கிரி-லா உரையாடலில் பங்கேற்ற  29 அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சசிகலா பிரேமவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.