நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைதுக்கு வைகோ கண்டனம் வெளியீடு!
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் ஜூன்-2 ஆம் திகதி மாலை மக்கள் சந்திப்புக்காகச் சென்ற, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது சிங்கள அரசின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தாக்கியதுடன், பொலிஸ் சீருடையிலிருந்த ஒருவர் துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டியிருக்கிறார்.
இலங்கை பொலிஸாரின் சாதாரண உடையில் வந்து தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் எனவும், தான் அடையாள அட்டையை காண்பிக்கக் கோரியதும் தன் மீது தாக்குதல் நடத்த அவர்கள் முயன்றனர் எனவும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் முறைப்பாடு தெரிவித்திருந்தார்.
ஆனால் இது தொடர்பாக ஊடகங்கள், இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் இருவரிடமும் கேள்வி எழுப்பிய போது, தங்களுக்கு எதுவும் தெரியாது எனப் பதில் அளித்தனர்.
இந்நிலையில் ஜூன் 7 ஆம் திகதி காலை, கொழும்பு- கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டில் அத்துமீறி நுழைந்த பொலிஸாரின் பொன்னம்பலத்தை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் டிரான் அல°, பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய பொன்னம்பலம் தடையாக இருந்தார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் ஒடுக்குமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே ஆயுதமுனையில் மிரட்டப்பட்டு இருக்கிறார். பின்னர் அவரைக் கைது செய்துள்ளனர்.
இலங்கை அரசின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது.
கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஈழத் தமிழர்களின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஜி.ஜி. பொன்னம்பலத்தின் பேரன் ஆவார். இவரது தந்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான குமார் பொன்னம்பலம் சிங்கள அரசின் சதியால் 2000 ஆம் ஆண்டு, ஜனவரி 5 ஆம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
தனது பாட்டனார் மற்றும் தந்தை வழியில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைக்காகவும், இறையாண்மையை மீட்கவும் ஜனநாயக முறையில் இயங்கி வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் சிங்கள அரசால் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று ஈழத் தமிழர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இலங்கையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்த நிலை என்றால் சாதாரண தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எந்த உத்தரவாதமும் இல்லை என்பது இதன் மூலம் வெளி உலகிற்குத் தெரிகிறது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிப்பதுடன், உடனடியாக இலங்கை அரசு அவரை விடுதலை செய்யவும் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். – என்றுள்ளது.
கருத்துக்களேதுமில்லை