ஒளி – ஒலி பரப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரசுக்கு சார்பாகவே ஊடகங்கள் செயற்படநேரும்! ஜயந்த சமரவீர எச்சரிக்கை

 

ஒளி மற்றும் ஒலி பரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஊடகங்களின் அழிவு ஆரம்பமாகும். ஊடக சுதந்திரத்தை முடக்குவதற்காகவே இந்த சட்டமூலத்தின் ஆரம்ப வரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தி நாட்டு மக்களின் எதிர்ப்பை ஒன்றுத்திரட்டுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

தேர்தலை நடத்துமாறு நாட்டு மக்கள் வலியுறுத்தியுள்ள பின்னணியில் ஊடகங்களை முடக்கும் வகையில் சட்டமியற்ற அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள ஒலி மற்றும் ஒளிபரப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 1966 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வானொளி சட்டம்,1987 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ரூபவாஹினி சட்டம் ஆகிய ஒலி மற்றும் ஒளிபரப்பு சட்டங்கள் இரத்துச் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து ஒருவருட காலத்துக்கு மாத்திரமே ஊடகங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கப்படும்.

ஒரு வருட காலத்துக்கு வழங்கப்படும் அனுமதி பத்திரத்தை 09 மாத காலத்துக்கு பின்னர் புதுப்பிக்க வேண்டும்.

ஊடகங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதை ஊடகத்துறை அமைச்சின் செயலாளர், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஜனாதிபதியால் பெயர் குறிப்பிடப்படும் மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் ஸ்தாபிக்கப்படும் அதிகார சபையே தீர்மானிக்கும்.

இந்த அதிகார சபையின் கூட்ட நடப்பெண் இரண்டாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே ஜனாதிபதியின் பிரதிநிதிகள் இந்த அதிகார சபையில் அதிகாரமிக்கவர்களாகச் செயற்படுவார்கள். ஊடக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அதிகார சபை இறுதித் தீர்மானம் எடுக்கும்.

அதிகார சபையின் அனுமதி இல்லாமல் எந்த ஊடக நிறுவனத்துக்கும் செயற்பட முடியாது.ஒருவேளை அனுமதி பத்திரம் மறுக்கப்படும் போது குறித்த ஊடக நிறுவனத்தின் சேவை முடக்கப்பட வேண்டும். அனுமதி பத்திரம் இல்லாமல் செயற்படுவது கடும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.

அனுமதி பத்திரம் பெற வேண்டும் என்றால் சகல ஊடகங்களும் அரசாங்கத்துக்கு சார்பாக செயற்பட வேண்டும்.

அரசாங்கத்துக்கு எதிராக எவரும் செயற்படக் கூடாது என்பதையே இந்த சட்டமூலம் மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை ஊடகங்கள் விமர்சிக்க முடியாது.

ஊடக பிரதானிகள் தமது நிறுவனத்தின் சேவையாளர்களைப் பாதுகாப்பதற்காக விரும்பியோ, விரும்பாமலோ அரசாங்கத்துக்கு சார்பாகச் செயற்பட நேரிடும்.

ஊடகங்கள் அரசாங்கத்துக்கு சார்பாகச் செயற்படும் போது நாட்டில் ஜனநாயகத்தின் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்க முடியாது.

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம். அத்துடன் இந்த சட்டமூலத்துக்கு எதிராக மக்களின் எதிர்ப்பையும் ஒன்றுத்திரட்டுவோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.