உள்ளூர் பேரூந்து சேவைகள் தொடர்பாக வவுனியாவில் விசேட தீர்மானம்!

வவுனியாவில் உள்ளூர் சேவைகளில் ஈடுபட்டுவரும் அரச தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வரை சென்று ஐந்து நிமிடங்கள் தரித்து நின்று சேவையில் ஈடுபடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டச் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பழைய பேருந்து நிலையம் வரை உள்ளூர் பேருந்து சேவைகளை நடாத்துவதற்கான செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வர்த்தகர் சங்கத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக அந்தபகுதியில் அதிகளவான வியாபாரநிலையங்கள் இருப்பதால் பொதுமக்கள் அங்கு வந்துசெல்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். எனவே குறித்த விடயம் தொடர்பாக கரிசனை கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக அரச, தனியார் பேருந்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கோரப்பட்டது. இதன்போது பழைய பேருந்து நிலையப்பகுதிக்குள் சேவையில் ஈடுபடுவதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த நடைமுறையை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், இது தொடர்பாக வடமாகாண ஆளுனர் மற்றும் பிரதமசெயலாளர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தி மேலதிக நடவடிக்கையை முன்னெடுக்குமாறு தீர்மானிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, அபிவிருத்திக்குழு தலைவர் கு.திலீபன், மாநகரசபை செயலாளர், உதவி பிரதேச செயலாளர், வர்த்தகர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், நடைபாதை வியாபாரிகள் சங்கம், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.