தேசிய கடன் மறுசீரமைப்பு, வரி அறவீட்டு முறைமை தளர்வுகள் தொடர்பாக அரசு வலியுறுத்த வேண்டும்! நாணய நிதியத்திடம் என்கிறார் எரான் விக்கிரமரத்ன
சர்வதேச நாணய நிதியத்துடன் செப்ரெம்பரில் இடம்பெறவுள்ள பேச்சின் போது தேசிய கடன் மறுசீரமைப்பு மற்றும் வரி அறவீட்டு முறைமை என்பவற்றில் தளர்வுகளை ஏற்படுத்தல் தொடர்பாக அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –
செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுகள் முன்னெடுக்கப்படவுள்ளன என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன் போது வரி அறவீட்டு முறைமை மற்றும் தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பல தரப்பினராலும் வலியுத்தப்பட்டுள்ள விடயங்களில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.
வரி அறவிடப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். காரணம் அது அரசாங்கத்தின் பிரதான வரி மூலமாகும். ஆனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் இந்த வரி அறவீட்டு முறைமையிலிருந்து விடுக்கப்பட வேண்டும். எனவே, தற்போது மாத வருமானமாக ஒரு லட்சம் பெறுவோர் வருமான வரி செலுத்த வேண்டும் என்று காணப்படும் ஏற்பாட்டை , இரண்டு லட்சமாக்க வேண்டும்.
அதே போன்று கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சின் போது தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையில் பாதிப்பு ஏற்படாத வகையில், வங்கி கட்டமைப்புக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.
இவை அனைத்தும் ஜனநாயகப் பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும். சர்வாதிகாரத்துக்கு இடமளிக்காது ஜனநாயக பொறிமுறையைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்னின்று செயற்படும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை