மக்கள் பிரதிநிதிகளின் வலியுறுத்தல்களுக்கு அமையவே ஆளுநர்கள் பதவிநீக்கப்பட்டனர்! இப்படிக் கூறுகிறார் சாகர

மாவட்ட அரசியல்வாதிகளுடன் இணக்கமாக செயற்படாத காரணத்தால் வடக்கு,கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் பதவி நீக்கப்பட்டார்கள்.

மாகாண சபை தேர்தல் இல்லாத நிலையில் ஆளுநர்கள் மாவட்ட அரசியல்வாதிகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும் என ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுக்கு மாகாண ஆளுநர் பதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவில்லை.

ஜனாதிபதியின் விருப்பத்துக்கு அமையவே அண்மையில் மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர் நியமனம் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய நியமனத்தால் வடக்கு,கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பதவி நீக்கப்பட்டார்கள் என குறிப்பிடப்படுகின்றமை அடிப்படையற்றது.

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதிகளான ஆளுநர்கள் மாவட்ட அரசியல்வாதிகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்.

ஆனால் வடக்கு,கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களின் ஆளுநர்கள் அந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுடன் இணக்கமாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை பொதுஜன பெரமுனவின் மாவட்ட அரசியல்வாதிகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பலமுறை முன்வைத்தார்.

அதேபோல், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் மாவட்ட அரசியல்வாதிகள் அதே குற்றச்சாட்டை முன்வைத்தார்கள்.

ஆகவே, மக்கள் பிரநிதிகளின் வலியுறுத்தலுக்கு அமையவே மாகாண ஆளுநர்கள் பதவி நீக்கப்பட்டார்களே தவிர அவர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நியமனம் என்பதால் பதவி நீக்கப்படவில்லை.

மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக இருந்தாலும் அவர்கள் மாவட்ட அரசியல்வாதிகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.