ஊடகங்கள் ஒருபோதும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட மாட்டாது : அமைச்சர் மனுஷ!

அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படும் என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுப்போம்.

அதேநேரம், சரியான தகவல்களை மக்கள் பெற்றுக் கொள்ளும் உரிமையும் அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு விடயங்களையும் முன்னிலைப்படுத்தியே நாம் இந்த சட்டமூலத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்த சட்டமூலத்தின் ஊடாக, ஊடகங்கள் ஒருபோதும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட மாட்டாது.

யாரேனும், பிழையான தகவல்களை வழங்கினால், அதற்கான ஒரு நெறிமுறையை கொண்டு வருவதற்கே நாம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்த சட்டமூலத்தைக் கொண்டுவர கடந்த காலங்களிலும் ஆராயப்பட்டது. 1997 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அந்தவகையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தும் வகையிலான சரத்துக்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடவும் தயாராகவே உள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.