தரம்பெற்ற அதிபர்கள் சங்கத்தின் வடமாகாண சம்மேளன கூட்டம்
தரம்பெற்ற அதிபர் சங்கத்தின் வடக்கு மாகாண சம்மேளனக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் லயன் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமால் முதுன்கொட்டுவ, உப செயலாளர் அஹமட் ராஜீ, ஊவா மாகாண தரம் பெற்ற அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் நிலங்க கேவகே, தேசிய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் விஜயதாஸ திசாநாயக்க, திருகோணமலை மாவட்ட தரம் பெற்ற அதிபர்கள் சங்கத்தின் இணைப்பாளர் விஜேசிங்க முதாநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.மாகாத் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டர்.
மேற்படி கூட்டத்தில் அதிபர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் முக்கியத்துவம் வாய்ந்த பிரகடணங்களும் எடுக்கப்பட்டன.
சம்மேளனக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிரகடனங்களாவன –
ஆசிரியர் சேவையில் இருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் முறையான வகையில் நடைபெறுகின்ற சம்பள ஏற்ற வேகத்தை மாற்றி உயர்ந்த சம்பள உரிமையை பெற்று கொள்ள ஜி.பி.ஏ. சம்பள ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தல். அந்த முயற்சி வெற்றியளிக்காத பட்சத்தில் நீதிமன்றத்தினூடாக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.
பேராசிரியர் குணபால நாணயக்கார குழுவால் அதிபர் சேவையின் அனைத்து உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு உயர்த்துவதை செய்யாவிட்டால் பேச்சு மூலம் ஜனநாயக ரீதியான தீர்வுக்கு வரவேண்டும். அதற்காக சங்கத்தின் தலைமைத்துவத்துக்கு அதிகாரத்தை வழங்குதல்.
அதிபர் சேவை 2 இலிருந்து 1 இற்கு பதவி உயர்வு பெறுகின்றபோது சம்பளம் குறைவதை தவிர்ப்பதற்காக மேலும் நடவடிக்கை எடுத்தல்.
பதவிநிலை உத்தியோகத்தர் சேவைக்கு உரிய வரப்பிரசாதங்கள் மற்றும் கொடுப்பனவுகளை வெற்றிகொள்ளவற்கு அடுத்த மூன்று மாதங்களில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுதல்.
ஏனைய பொதுவான பிரச்சினைகளைத் தீர்த்து கொள்வதற்கு புதிய அதிபர் சேவை பிரமாணக்குறிப்பினை உருவாக்குவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுத்தல்.
சங்கத்தின் நிறைவேற்று குழுவில் பிரதிநிதித்துவத்துக்கு அனைத்து மாகாணத்திலிருந்தும் ஒருவருக்காவது சந்தர்ப்பமளிக்கும் வகையில் சங்கத்தின் யாப்பில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்.
அடுத்த பதவிகள் மாற்றத்தின் போது சங்கத்தின் தலைமைத்துவத்தில் மாற்றம் கொண்டு வராதிருத்தல்.
சங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஒழுங்குகளை மேற்கொள்ளல்.
மாகாண அதிபர் இடமாற்றக்கொள்கைகள் மாற்றுவதற்கு தரம் பெற்ற அதிபர்கள் சங்கம் தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்பதோடு அதனை மேலும் பலப்படுத்தி அதிபர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தல் வேண்டும்.
பல நூற்றுக்கணக்கான வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிபர்கள் கலந்துகொண்டமை மற்றும் வடக்கில் நடைபெற்ற மிகப்பெரிய அதிபர் தொழிற்சங்க கூட்டமாக இந்தக் கூட்டம் விளங்கியமை சங்கத்தின் பலத்தை எடுத்துகாட்டியதாக பலரும் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை