சகல அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் இல்லாவிடில் மக்கள் எதிர்மறையாகச் செயற்படுவார்கள்! வெருட்டுகிறார் நீதி அமைச்சர் விஜயதாஸ
ஆசியாவில் சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டம் இலங்கையில் இயற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் விமர்சிக்கிறார்கள். ஆகவே ஊழல் ஒழிப்புக்கு சகல அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய செயற்படாவிட்டால் மக்கள் எதிர்மறையாக செயற்படுவார்கள், நாடாளுமன்றத்தை விமர்சிப்பார்கள்.
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பின் முன்வைக்கப்படும் திருத்தங்களை வெளிப்படை தன்மையுடன் ஏற்றுக்கொள்வோம் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றியவை வருமாறு –
ஊழல் எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தில் இலங்கை 2004 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டது. இருப்பினும் 19 ஆண்டுகள் கடந்தும் ஊழல் எதிர்ப்பு சட்டம் நிறைவேற்றப்படவில்லை. 2015 ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை இயற்ற ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை.
2022 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து ஊழல் எதிர்ப்பு சட்டத்தை இயற்ற தீர்மானிக்கப்பட்டது. துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுடன் சட்டமூல தயாரிப்புக்காக விசேட குழு நியமிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூல வரைவை ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினார்கள். சட்டமூலத்தை உயர்நீதிமன்றம் முழுமையாக பரிசீலனை செய்து பல திருத்தங்களை முன்வைத்துள்ளது. அதே போல் எதிர்க்கட்சியினரும் திருத்தங்களை முன்வைத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துறைசார் மேற்பார்வை குழு வேளையின் போது முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் இறுதியான தீர்மானத்தை எடுக்க முடியவில்லை. இதற்கமைய சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து கட்சி தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இரு நாள் விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1994 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஊழல் ஒழிப்பு தொடர்பான சட்டமூலத்தை தயாரித்தது. அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களைக் கண்காணிக்க உரிய வழிமுறை இல்லை என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் காணப்பட்டது. இதுவும் அக்காலப்பகுதியில் பாரிய அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு ஒரு காரணியாக அமைந்தது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது. இதன் காரணமாகவே ஊழல் எதிர்ப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. பாரிய மாற்றத்துக்கான அம்சங்களை இந்த சட்டமூலம் கொண்டுள்ளது. ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் அரசமைப்பு பேரவையின் ஊடாகவே நியமிக்கப்படுவார்கள்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள், பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றமை தொடர்பாக மக்கள் மத்தியில் மாறுப்பட்ட கருத்து காணப்படுகிறது. ஆகவே ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக அமைக்கப்படும் புதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் 62 வயதை அண்மித்து, துறைசார் நிபுணத்துவத்தை கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.
நிதி சுயாதீனம், பரிபாலனம் ஆகிய விடயங்களில் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. ஜனாதிபதி ,ஆணைக்குழுக்களின் தலைவர்கள், தூதுவர்கள், ஆளுநர்கள், அரசியல்வாதிகள் உட்பட உயர் பதவிகள் வகிக்கும் அனைவரும் தமது சொத்து விவரங்களை வெளிப்படுத்த வேண்டும்.
முன்வைக்கப்படும் சொத்து விவரங்களின் உண்மை தன்மையை ஆராய்வதற்கு தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் சொத்து விவரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். சொத்து விவரங்களை வெளிப்படுத்தும் சட்டம் இந்த ஊழல் எதிர்ப்பு சட்டத்தால் வலுப்படுத்தப்படும்.
அரச அதிகாரி ஒருவர் வருடாந்த சொத்து விவரத்தை வெளிப்படுத்தாவிடின் முதல் கட்டமாக அவரது ஒருமாத சம்பளம் ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்படும்,அதனை தொடர்ந்து அறிக்கை சமர்ப்பிக்கபடாவிடின் அவரது ஆறுமாத கால சம்பளம் இடைநிறுத்தப்படும்,மூன்றாவது கட்டமாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. அரச அதிகாரி ஒருவர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றதன் பின்னரும் இரண்டாண்டு காலத்துக்கு சொத்து விவரங்களை வெளிப்படுத்த வேண்டும்.அரச நிறுவனங்களில் உயர்மட்டத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை கீழ்நிலை சேவையாளர்கள் வெளிப்படுத்துவதில்லை.
தகவல்களை வெளிப்படுத்துவதால் தமது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என அவர்கள் கருதுகிறார்கள். ஆகவே, தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மையை பாதுகாக்க இந்த சட்டமூலத்தில் விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்கள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகுகிறார்கள். ஆகவே பாலியல் சீண்டல்கள், ஊழல் குற்றம் என்று இந்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் சாதகமான திருத்தங்களை முன்வைத்தால் அதனை வெளிப்படை தன்மையுடன் செயற்படுத்துவோம்.
ஆசியாவில் மிக சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அதற்கான ஆரம்பமே இதுவாகும். நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பு எதிர் தரப்பை நோக்கி திருடன் என்பதும், எதிர்த்தரப்பு ஆளும் தரப்பை நோக்கி திருடன் என்பதும் இயல்பானது என்று மக்கள் கருதுகிறார்கள்.
திருடன் என்று விமர்சிக்கப்படுவதை இல்லாதொழிக்கவும், ஊழலை இல்லாதொழிக்கவும் நாடாளுமன்றத்தின் ஊடாக சட்டம் இயற்றப்பட வேண்டும். ஊழல் ஒழிப்புக்கு 225 ஆதரவு என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய நாடாளுமன்றம் செயற்படாவிட்டால் மக்கள் எதிர்மறையான வழிமுறைக்கு செல்வார்கள். தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் மக்கள் கடுமையாக விமர்சிப்பார்கள்.
சகல தரப்பினரது ஒத்துழைப்புடன் அரசமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய ஊழல் எதிர்ப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய ஊழல் எதிர்ப்பு சட்டம் இயற்றப்பட அரசாங்கம் முயற்சிக்கிறது என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது. நாடாளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகம் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்படவுள்ளது. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை