குருந்தூர் மலையில் அப்பட்டமான அரச சர்வாதிகாரம் – சபா குகதாஸ்

தமிழர்களின் தொல்லியல்களை சிங்கள பௌத்தமாக மாற்றியமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தனது அரச இயந்திரத்தை சர்வாதிகாரமாக வழி நடாத்தி தமிழர்களின் இருப்பை அழிக்க பல முனைகளிலும் கங்கணம் கட்டி நிற்கின்றனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வியாழக்கிழமை (22) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

இலங்கைத்தீவில் ஆரம்பத்தில் அனுராதபுரத்தை ஆண்ட முத்துசிவன் மன்னனின் மகன் தீசன் (தேவநம்பியதீசன்) என்கிற தமிழ் மன்னன் காலத்தில் தான் பௌத்தம் கொண்டுவரப்பட்டது என்ற உண்மையை மகாவம்சத்தின் பாளி மொழியிலான மூலப் பிரதி கூறியுள்ளதை மறைத்து உண்மையான தமிழ்ப் பௌத்த தொல்லியல் அடையாளங்களை சிங்கள பௌத்தமாக மாற்றும் எதேச்சதிகார நடவடிக்கைகளையே பேரினவாத ஆட்சியாளர்களும் தொடரந்து மேற் கொள்கின்றனர்.

தீசன் என்ற பெயரை திஸ்ஸ என சிங்களத்தில் பிற்காலத்தில் மாற்றியது போலவே அனுராதபுரத்தில் இருந்து வடகிழக்கு மாகாணங்கள் முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்ட போது சைவ ஆலயங்களுடன் தமிழ் பௌத்தமும் பரவி இருந்தது அவ்வாறான தொன்மைகளை தற்போது சிங்கள ஆட்சியாளர்கள் சிங்கள பௌத்தமாக மாற்றியமைக்கும் செயற்பாடு தமிழின அழிப்புக்கு வலுச் சேர்க்கும் பாரிய ஆபத்தாக தமிழர் தாயகத்தில் மாறியுள்ளது.

குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட செயற்பாடு சட்டத்திற்கு முரணானது என்பதை நீதிமன்ற தடையே மிகப் பெரும் ஆதாரம் அதனை மீறி இராணுவத்தை முழுமையாக பயன்படுத்தி நீதிமன்றத்தை அவமதித்து விகாரையை கட்டி முடித்து இராணுவம் அமைத்ததாக பெயர்ப் பலகை இடப்பட்டுள்ளது என்றால் தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு நடைபெறும் அடக்கு முறைகளுக்கு மிகப் பெரும் ஆதாரம் ஐனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் அரச சர்வாதிகாரம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.