இவ்வாண்டில் நிறைவடைந்த காலப்பகுதியில் மாத்திரம் பேராதனை பல்கலைகழக மாணவர்களில் ஐவர் தற்கொலை – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

நிறைவடைந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் பேராதனை பல்கலைக்கழக மாணவர்களில் ஐவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள். மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் புதன்கிழமை கலந்துரையாடலில் ஈடுபட்டேன். பல்கலைக்கழக மாணவர்கள், சமூகத்தினர் நடைமுறையில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்துமாறு அவர்கள் வலியுறுத்தினார்கள்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஆண்டு நிறைவடைந்த காலப்பகுதியில் மாத்திரம் ஐந்து மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள். தற்கொலைக்கு முயற்சித்த இரண்டு மாணவர்களுக்கு பல்கலைகழக உளவியல் பிரிவு ஊடாக உளவியல் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் ஒருவேளை தான் உணவு உண்கிறார்கள். மாணவர்களின் செலவுகளுக்கு பணம் அனுப்ப முடியாத நிலையில் பெற்றோர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாணவர்கள் உடல் நல ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள், உடல் மெலிந்துள்ளார்கள். விரிவுரைகளின் போது மாணவர்கள் மயங்கி விழுகிறார்கள் என பல்கலைக்கழக பேராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். மாணவர்கள் நாட்டில் எதிர்காலம் ஆகிய இந்த பிரச்சினையின் பாரதூரத்தன்மையை விளங்கி துரிதகரமாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். கல்வி அமைச்சு தலையிட வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் 1 இலட்சத்து 45 ஆயிரம் மாணவர்களுக்கு மாஹபொல புலமைபரிசில் திட்டம் ஊடாக மாத கொடுப்பனவு வழங்கப்படுகிறது.பல்வேறு காரணிகளினால் 11 ஆயிரம் மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கப்படுவதில்லை. ஆகவே இந்த மாணவர்களுக்கும் புலமை பரிசில் வழங்க உரிய நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.