கோட்டாவின் ஆட்சியில் நாடு 9 ஆண்டுகள் பின்நோக்கிச் சென்றுள்ளது – ஹர்ஷ டி சில்வா
கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருடகால ஆட்சியில் நாடு ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.
பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்று பொறுப்பில் இருந்து விலகும் வகையில் கருத்துரைக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய தேசிய கடன் மறுசீரமைக்கப்படவுள்ளதாக
குறிப்பிடப்படுவது அடிப்படையற்றதாகும். ஒட்டுமொத்த கடன்களையும் மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டது.
தேசிய கடன்களை மறுசீரமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மார்ச் மாதம் 06 ஆம் திகி சர்வதேச நாணய நிதியத்துக்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
2048 ஆம் ஆண்டு நாட்டை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.பொருளாதார விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
2022 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் தனிநபர் ஒருவரின் வருமானம் 3400 டொலராக குறைவடைந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருட ஆட்சி காலத்தில் நாடு 09 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.
2048 ஆம் ஆண்டு நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சி வீதம் 6.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்.
ஆகவே பொருளாதார முன்னேற்றத்தை அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு குறிப்பிட முடியாது என்றார்.
கருத்துக்களேதுமில்லை