50 ரூபா சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நவீன் ஆளுநராக நியமிக்கப்பட்டமை முறையற்றது – இராதாகிருஸ்ணன்
பெருந்தோட்ட மக்களுக்கு 50 ரூபா சம்பளத்தை அதிகரித்த இடமளிக்காத நவீன் திஸாநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முறையற்றதாகும். 200 வருட கால வரலாற்று பின்னணியை மலையக மக்கள் பூர்த்தி செய்துள்ள போதும் துயரங்களில் இருந்து விமோசனம் கிடைக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
கடந்த ஆண்டு சமூக கட்டமைப்பின் நிலைமைக்கும்,தற்போதைய நிலைமைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.2048 ஆம் ஆண்டு நாட்டை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2004 ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த போது 2025 ஆம் ஆண்டு நாட்டை அபிவிருத்தி செய்வதாக குறிப்பிட்டார்.தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போது 2048 ஆம் ஆண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என குறிப்பிடுகிறார்.
நாட்டை அபிவிருத்தி செய்யும் காலத்தை அறிவித்துக் கொண்டு ஜனாதிபதி காலத்தை கடத்த முடியும்.ஆனால் அதுவரை நாட்டு மக்களால் எவ்வாறு வாழ முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தற்போதைய பொருளாதார பாதிப்பால் மலையக மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மூன்று வேளை உணவு தற்போது ஒருவேளையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக இதுவரை நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பெருந்தோட்ட மக்கள் 200 வருடகால வரலாற்று பின்னணியை பூர்த்தி செய்துள்ளார்கள்.இருப்பினும் அவர்கள் படும் துயரத்துக்கு விமோசனம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.பெருந்தோட்ட மக்களுக்கு 50 ரூபா சம்பளத்தை அதிகரிக்க இடமளிக்காத நவீன் திஸாநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது முறையற்றதாகும்.
தனது வீட்டையும்,அங்கிருந்த 3000 புத்தகங்களையும் போராட்டகாரர்கள் எரித்தார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலை கண்ணீர் வடிக்கிறார்.ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது தமிழர்களின் பொக்கிஷமாக கருதப்பட்ட யாழ்.நூலக சாலை தீயிடப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்ன நடவடிக்கை எடுத்தார் ஒன்றும் இல்லை.
கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட நியமனம் முரண்பட்டதாக உள்ளது.யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவருக்கு நுவரெலியா மாவட்டத்துக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு மாகாணம் தொடர்பற்ற வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
40 ஆயிரம் சம்பளத்துடன் தற்போதைய வாழ்க்கை செலவுக்கு மத்தியில் தூர பகுதிகளுக்கு நியமனம் வழங்கும் போது ஆசிரியர்களால் எவ்வாறு மன நிம்மதியுடன் சேவையாற்ற முடியும்.ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
கருத்துக்களேதுமில்லை