நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அவுஸ்ரேலியாவுக்கு வழங்க தீர்மானிக்கவில்லை – மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சு

இலங்கை மின்சார சபை இன்றளவில் அரச வங்கிகளுக்கு 516 பில்லியன் ரூபா கடனாளியாக உள்ளது. ஆகவே மின்சார சபையை மறுசீரமைப்பதை தவிர மாற்று வழியேதும் கிடையாது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அவுஸ்ரேலிய நிறுவனத்தக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் குறிப்பிடும் விடயம் அடிப்படையற்றது.

நீர் மின் உற்பத்தி நிலையங்களை ஒரு நிறுவன கட்டமைப்பின் கீழ் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாரிய நட்டத்தில் இயங்கும் மின்சார சபையை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.வெகுவிரைவில் மறுசீரமைப்புக்கான பணிகள் முன்னெடுக்கப்படும்.மின்சார சபையின் கட்டமைப்புக்களை வேறுப்படுத்தவும் சேவையாளர்களை புதிய நிறுவன கட்டமைப்புக்குள் உள்வாங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபை இன்றளவில் 516 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.மின்னுற்பத்திக்கான செலவை முகாமைத்துவம் செய்யும் வகையில் மின்கட்டணம் காலத்துக்கு காலம் மறுசீரமைக்காத காரணத்தால் மின்சார சபை நிதியியல் ரீதியில் பாரிய நெருக்கடிகளை இதுவரை காலமும் எதிர்கொண்டது.

தற்போது அமுலில் உள்ள புதிய மின்கட்டண திருத்தத்தால் தற்போது மின்னுற்பத்திக்கான செலவுகளை முகாமைத்துவம் செய்ய முடிந்துள்ளது.

மின்சார சபையை மறுசீரமைக்கும் யோசனைக்கு ஒட்டுமொத்த தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அரசியல் நோக்கத்துடன் செயற்படும் ஒருசில தொழிற்சங்கத்தினர் மாத்திரமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு சார்பாக செயற்படும் தொழிற்சங்க தலைவர் ரஞ்சன் ஜயலால் மின்சார சபை சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றவர் இவர் தனது அரசியல் கட்சியின் தேவைக்காக மின்சார சபையின் சகல சேவையாளர்களையும் தவறான வழிநடத்துகிறார்.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தை அவுஸ்ரேலிய நாட்டு நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றவை.

அனல் மின்நிலையத்தை அன்மித்த பகுதியில் நிலக்கரியை அடிப்படையாக கொண்டு இரண்டாம் கட்ட தொழிற்துறைகளை முன்னெடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இவ்விடயம் குறித்து இதுவரை எவ்வித இறுதி தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.