கடன் மறுசீரமைப்புக்கு இலங்கை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்! பிரதமரிடம் சீனா உறுதி
கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கை முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என்று சீனா உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ ஷென்ஹொங் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன் போதே சீனத்தூதுவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளாக சீனாவிலிருந்து நேரடி முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன என சீனத்தூதுவரிடம் தெரிவித்துள்ள பிரதமர் , விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் நீர் வழங்கல் துறைகளிலும் முதலீடுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய முதலீட்டுத் திட்டங்கள், சீனாவுடனான வர்த்தக விரிவாக்கம், கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், கல்வி, விவசாயம், கலாசாரப் பரிமாற்றங்கள், உயர்மட்ட உறவுகள், பின்தங்கியவர்களுக்கான உதவிகள் உள்ளிட்ட பல முக்கிய காரணிகள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.
சீனாவின் யுனான் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் அதிக அறுவடை தரக்கூடிய அரிசி வகைகளை அறிமுகப்படுத்தி இலங்கையில், அரிசி உற்பத்தியை அதிகரிக்க கிராமப்புற மக்களுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் சீனத் தூதுவரிடம் விசேட கோரிக்கை ஒன்றை இதன் போது முன்வைத்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு முன்னெடுத்துள்ள முயற்சிகள் மகிழ்ச்சியளிக்கின்றன எனவும், கடனை மறுசீரமைப்பதற்கும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் இலங்கையின் தற்போதைய முயற்சிகளை எதிர்கொள்ள சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்துவதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை, புத்தளம் போன்ற தொலைதூர பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்குச் சென்று கல்வித் தேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதில் சீனா வழங்கும் ஆதரவுகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச மாநாடுகளில் இலங்கையின் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கான சீனாவின் நிலைப்பாடு தொடர்பிலும் நன்றி தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை