ஹங்குரான்கெத்தவில் இளைஞர் தலையில் தாக்கப்பட்டுக் கொலை : 8 பேர் சந்தேகத்தில் கைது!

ஹங்குரான்கெத்த உடவத்தகும்புர பிரதேசத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 19ஆம் திகதி இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற காணித் தகராறில் குறித்த இளைஞர் தலையில் பலமாக தாக்கப்பட்டு கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த மோதலில் இளைஞனின் தந்தையும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை எனக் கூறி இருநூறுக்கும் மேற்பட்டோர் ஹங்குரான்கெத்த பொலிஸ் நிலையத்தைச் சுற்றிவளைத்து கலவரத்தில் ஈடுபட்டதால் அவர்களைக் கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

தாக்குதலின் பின்னர், பிரதேசத்தை விட்டுத் தப்பியோடி மறைந்திருந்த சந்தேக நபர்கள் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களில் ஒருவர் பெண்ணாவார். அவரது கணவர் மற்றும் மகனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.