பயனற்ற திட்டங்களுக்கு நிதி வழங்கமுடியாதாம்! ஷெகான் சேமசிங்க திட்டவட்டம்

ஆட்சியில் இருந்த பல அரசாங்கங்கள் முன்னெடுத்த அபிவிருத்தி செயற்திட்டங்களால் எவ்வித பயனும் கிடைக்கப் பெறுவதில்லை. மக்களுக்கு பயனளிக்காத அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு நிதி வழங்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் ஒன்றிணைந்த அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பில் நிதியமைச்சில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

2016 ஆம் ஆண்டு வெளிநாட்டு முகவர் நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டத்துக்கான செலவு 62.4 மில்லியன் யூரோவாக மதிப்பிடப்பட்டது.குறித்த திட்டத்தின் கீழ் நாட்டின் பிரதான நகரங்களில் பல கட்டடங்கள் கட்டப்பட்டன. இருப்பினும் இந்தக் கட்டடங்கள் தற்போது பராமரிப்பற்ற நிலையில் பயனற்ற வகையில் காணப்படுகின்றன.முறையான திட்டமிடல் ஏதும் இல்லாமல் இருந்தமை இந்த நிலைக்கான பிரதான காரணமாகும்.

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளில் மக்கள் பயன் பெறுவார்களா என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.

ஆட்சியில் இருந்த பல அரசாங்கங்கள் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களால் மக்கள் பயன்பெறவில்லை. ஆகவே, மக்களுக்கு பயனளிக்காத அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி வழங்க முடியாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.