மக்கள் எவரையும் கைவிடாத வகையில் அஸ்வெசுமவை நடைமுறைப்படுத்துக!  ஜனாதிபதி ஆலோசனை

அஸ்வெசும சமூக நலன்புரி திட்டத்தை எவரையும் கைவிடாத வகையில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய தற்போது பதிவுசெய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் மீண்டும் வாய்ப்பளிப்பதற்கும், எழுத்துமூல மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க ஜூலை 10ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

அஸ்வசும சமூக பாதுகாப்பு நலன் திட்டத்துக்காக நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் 37 லட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், மதிப்பாய்வின் பின்னர் 33 லட்சம் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளுக்கு உட்பட்டு, இந்த கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியானவர்கள் என 20 லட்சம் பயனாளிகளது பெயர் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதேச செயலக மட்டத்தில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக்குழு தரவுகளை மதிப்பாய்வு செய்து மாவட்ட செயலாளரின் அனுமதியின் பின்னர் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்படாத ஆனால் , அதற்கு தகுதிகளுடையவர்கள் மேன்முறையீடு செய்வதற்கு ஜூலை 10ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியற்றவர்கள் பெயர்பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்தால் , அவர்கள் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முறைப்பாடளிப்பவர்கள் தமது பெயர் விவரங்களைக் குறிப்பிடாமல் தகவல்களை வழங்க முடியும்.

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்து மூலம் பிராந்திய செயலகங்களில் சமர்ப்பிக்க முடியும். இது தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எவருக்கும் அநீதி இழைக்கப்படாமலும், எவரும் கைவிடப்படாத  வகையிலும் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு அமைய செயற்படுமாறு அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவுக்கு சமாந்தரமாக முதியோர் கொடுப்பனவு பெறும் 4 லட்சத்து 56 ஆயிரத்து 806 பேர் , 19 ஆயிரத்து 469 சிறுநீரக நோயாளர்கள் , 46 ஆயிரத்து 857 ஊனமுற்றோர் என 5 லட்சத்து 23 ஆயிரத்து 159 பயனாளிகளது பெயர் பட்டியல் அடுத்த வாரம் பகிரங்கப்படுத்தப்படும்.

அஸ்வசும சமூக நலப் பயன் திட்டத்தில் பதிவு செய்ய முடியாதவர்களுக்கும், புதிதாக திட்டத்தில் சேர விரும்புபவர்களுக்கும் ஆண்டுதோறும் வாய்ப்பு வழங்கப்படும். – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.