என் மீது முன்வைக்கப்படுகின்ற அனைத்து குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றைவை – தென்கிழக்கு பல்கலை உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் விளக்கம்
என் மீது முன்வைக்கப்பட்டு வருகின்ற அனைத்துக் குற்றச் சாட்டுக்களும் அடிப்படையற்றவையும் அபாண்டமானவையும் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் மீதும் வளர்ச்சியின் மீதும் என்மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு சிலரின் நடவடிக்கை இது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
ஒரு சில சூழ்ச்சிக்காரர்கள் மட்டுமன்றி, இவ் விவகாரத்தின் உண்மைத் தன்மை தெரியாமல் சில அரசியல்வாதிகளும் கூட எனக்கெதிராக கருத்துக்களை முன்வைக்கின்றனர். இந்நிலையில், சவூதி மன்னரின் அழைப்பில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு மக்காவுக்கு செல்ல முயன்ற என்னை தடுத்து நிறுத்தியமை மிகவும் கவலைக்குரியதாகும் என்றும் அவர் கூறினார்.
கலாநிதி ரமீஸ் அபூபக்கர் உபவேந்தராக நியமிக்கப்பட்டமை, அவரது ஆய்வுக் கட்டுரை, பல்கலைக்கழக நிர்வாகம், ஆட்சேர்ப்பு தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் தொடர்பில் உபவேந்தர் அறிக்கையொள்றை வெளியிட்டு ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இங்கு உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில்,
இந்தப் பல்கலைக்கழகம் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் என்ற இந்த சமூகத்தின் மிகப் பெரும் தலைவரால் ஸ்தாபிக்கப்பட்டது. அவரது பெரும் கனவுகளை நிறைவேற்ற வேண்டிய கல்விக் கூடமாக இது இருக்கின்றது. இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவனாக இருந்தவன் என்ற வகையில் அதனை நான் நன்கு அறிவேன்.
இந்தப் பல்கலைக்கழகத்திலேயே கற்று இங்கேயே உபவேந்தராகிய முதலாவது மாணவன் நான்தான். அத்துடன் ஒரு கூலித் தொழிலாளியின் மகனாக இருந்து இப்பதவிக்கு வந்தவன் என்று சொல்விக் கொள்வதில் பெருமை கொள்கின்றேன்.
எனது நியமனம் மற்றும் வேறுபல விடயங்கள் குறித்து இப்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சமூக வலைத்தளங்களும் ஓரிரு ஊடகங்களும் இதற்காக தவறாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்தப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து உபவேந்தர்களுக்கும் நிர்வாகத்திற்கும் ஒருசில தரப்பினர் குழப்பம் விளைவித்துக் கொண்டே இருந்தனர். ஒரு உப வேந்தரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்துமளவுக்கு அவர்களது நடவடிக்கைகள் காட்டுமிராண்டித்தனமாக இருந்தன என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
என்மீதான குற்றச்சாட்டுக்களும் அதன் தொடர்ச்சியே என்பதையும் இந்த விமர்சனங்களைச் செய்வோர் யார் என்பதையும் விடமறிந்த மக்கள் அறிவார்கள். ஆயினும், இப் பல்கலைக்கழகத்தில் அக்கறையுள்ள வெளிச் சமூகத்திற்கு உண்மைகள் தெரிய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவுமே இந்த விளக்கத்தை அளிக்கின்றேன்.
எனது நியமனம் தவறானது என சொல்கின்றார்கள். ஆனால், பல்கலைக்கழக நெறிமுறைகளுக்கு அமைவாக புள்ளிகள் இடப்பட்டு, ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்தின் பிரகாரம் சட்டப்படியே நான் நியமிக்கப்பட்டேன். அதுபோல, போலியானது என விமர்சிக்கப்படும் எனது ஆய்வுக்கட்டுரையும் அது தொடர்பான வரையறைகளுக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது.
இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முறையான விசாரணை நடத்தியதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர்களுக்கும் எனக்குமான உறவில் பாதிப்பில்லை. அத்துடன் அவர்கள் கோரிய விளக்கங்கள் அனைத்திற்கும் எழுத்துமூலம் பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனது காலத்தில் பல்கலைக்கழகத்திற்குள் முறையற்ற பதவியுயர்வுகளையோ நியமனங்களையோ வழங்கவில்லை. தவறான நிதிக் கையாடல்களும் இடம்பெறவில்லை. பல்கலைக்கழகத்திற்குள் அவ்வாறு செய்யவும் முடியாது. அதற்கென்று செயன்முறைகளும் விதிமுறைகளும் உள்ளன.
எனது காலத்தில் இந்தப் பல்கலைகழகத்தை முன்னேற்ற நாம் எல்லோரும் பாடுபட்டுள்ளோம். வைத்திய பீடத்தையும், பட்டப்பின் கற்கை பீடத்தையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உண்மையில் எனது நியமனத்தில் அல்லது நிர்வாகத்தில் தவறுகள் இடம்பெற்றிருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடலாம். அதைவிடுத்து, என்னை அடிப்படையற்ற விதத்தில் சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதும், அது பற்றிய தெளிவின்றி அரசியல்வாதிகள் கருத்து தெரிவிப்பதும் அபத்தமானதாகும்.
அதுமட்டுமன்றி சவூதி மன்னரின் அழைப்பின் பேரில் ஹஜ் கடமையை செய்வதற்கு நான் முறைப்படி அனுமதி பெற்றிருந்த நிலையில், கடைசித் தருணத்தில் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டது. இதன்மூலம் இந்த புனித கடமையை செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதற்குப் பின்னால் இருந்தவர்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவான். எவ்வாறிருப்பினும், அடிப்படையற்ற, அபாண்டமான, விமர்சனங்களுக்கு நான் சட்டத்தை நாடியுள்ளேன்.
இதேவேளை, சாய்ந்தமருதில் நடைபெற்ற ஒரு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எனது சகோதரர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். அவர் எனது சகோதரர் என்று கூட பார்க்காமல் இப் பல்கலைக்கழக ஊழியர் என்றவகையில் பல்கலைக்கழக ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக அவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்பதையும் கூற விரும்புகின்றேன்.
கருத்துக்களேதுமில்லை