இளம் குற்றவாளிகளுக்குத் தொழில் ஆன்மிக பயிற்சி வழங்கல் அவசியம்! துறைசார் மேற்பார்வைக் குழுவில் சுட்டிக்காட்டு

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தண்டனை பெற்றுவரும் இளம் குற்றவாளிகளுக்கு தற்போது காணப்படும் பொதுவான கல்வி முறையின் கீழ் கற்பிப்பது தோல்வி அடைந்திருப்பதாகவும், அவர்களுக்காக ஆன்மிக வளர்ச்சி மற்றும் நடத்தையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என துறைசார் மேற்பார்வைக் குழு சார்பில் கலந்துகொண்ட இளைஞர் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், இளம் குற்றவாளிகளுக்கு தொழிற்கல்வி வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அதேபோல் ஒரு வருட பயிற்சிக்காலம் முடிந்து மீதம் உள்ள 2 ஆண்டுகளில் வருமானம் ஈட்டும் முறை போன்றவற்றை அறிமுகப்படுத்துவதோடு, சிறுவர்கள் 3 வருட வதிவிடக் காலப் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறும்போது பொருளாதார வசதிகளுடன் வெளியே செல்லவைப்பதன் மூலம் குற்றச்செயல்கள் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் உள்ள வட்டரக்க இளம் குற்றவாளிகள் பயிற்சிக் கல்லூரி மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம் ஆகியவை நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அழைக்கப்பட்டிருந்தபோதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தலைமையில் அண்மையில் கூடியது.

இதன்போது, 16 – 22 வயதுக்குட்பட்ட காலத்தில் குற்றம் செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் நீதிவான் நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட இளம் குற்றவாளிகள் இந்த நிறுவனத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். தண்டனைக் காலம் என்பது சிறைத்தண்டனை அல்ல, 3 ஆண்டுகள் கட்டாயத் தடுத்துவைப்புக் காலம் என்றும், இந்த தடுத்துவைப்பு காலத்துக்குப் பின்னர் சிறுவர்கள் வெளிச் சூழலில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் வட்டரக்க இளம் குற்றவாளிகள் பயிற்சிக் கல்லூரியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஏ.வி.வஜிரா தமயந்தி தெரிவித்தார்.

நிறுவனத்தின் தரவுகளின்படி, 2013 – 2022 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் இளம் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படும் போக்கு குறைவடைந்திருந்ததாகவும், இந்தப் பயிற்சிக் கல்லூரியில் நுழையும் பல சிறுவர்களின் குடும்ப உறவுகள் இல்லாமல் போவதும் தெரியவந்துள்ளது.

வட்டரக்க இளம் குற்றவாளிகள் பயிற்சிக் கல்லூரியில் கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைய பாடசாலைக் கல்வி வழங்கப்படுவதாகவும், இது அவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கமைய, அங்குள்ள சிறுவர்கள் பொதுப் பரீட்சைகளுக்குத் தோற்றுகின்றபோது தேர்ச்சி வீதம் குறைவாகவே காணப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய சிறுவர்களின் எண்ணிக்கை 16 ஆக இருந்த போதிலும், அவர்களில் ஒருவரே சித்தியடைந்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் ஒரு சிறுவன் மாத்திரமே தேர்ச்சியடைந்துள்ளார்.

பாடசாலைக் கல்வியைக் கட்டாயமாக்கும் சட்டத்தின் மூலம் அவர்களுக்கு தொழில்முறை கல்வியைத் திறம்பட வழங்குவதில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் இந்தப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க குழு இணங்கியது.

‍அதனையடுத்து, இளம் குற்றவாளிகளில் எத்தனை பேர் மீண்டும் குற்றவாளிகளாக இருக்க வாய்ப்புள்ளது என்ற கேள்வியை குழு எழுப்பியது. அதற்குப் பதிலளித்த அதிகாரிகள் 11 பேரில் 9 பேர் மீண்டும் குற்றவாளிகளாக இருக்க வாய்ப்புள்ளது. – என்றனர்.

இந்தச் சிறுவர்களுக்கான மொழிப் புலமையை வழங்குவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக இச்சிறுவர்களுக்கு வெளிநாட்டு வேலைகளுக்குப் பரிந்துரைப்பதற்கான சில வழிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

அத்தோடு, சிறைச்சாலைகளில் நிலவும் அதிக நெருக்கடியைக் குறைக்க சமூகம் சார் சீர்திருத்த திணைக்களத்தைப் பயன்படுத்த முடியும் எனவும், அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் குழு சுட்டிக்காட்டியது.

மேலும், இந்தக் கூட்டத்தில் சமூக அடிப்படையிலான திருத்தங்களுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டியவர்களில், ஆனால் நீதிவான்களால் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் சுமார் 50 வீதம் பேர் திருத்தங்களுக்கு பரிந்துரைக்கப்படலாம் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இது மிகவும் சிக்கலான நிலை என சுட்டிக்காட்டிய குழு, இது தொடர்பில் நீதிபதிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தது.

அரச நிறுவனங்களைப் பரிசீலிக்கும்போது, ஒரே நோக்கத்துக்காக பல நிறுவனங்கள் இருப்பதும், அந்த நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்புகள் இன்மையும் பிரச்சினையாக உள்ளதாக இளைஞர் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

திட்டங்களை முன்வைக்கும்போது, பசுமைத் திட்டங்கள், பிளாஸ்டிக் மற்றும் குடிநீர் போத்தல்களை மீள்சுழற்சி செய்யும் திட்டங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் வருமானம் பெற்றுத்தரும் செயல்முறைகளை உருவாக்க முடியும் என்றும் அவர்கள் முன்மொழிந்தனர்.

மேலும், அரசாங்கத்தின் உதவியுடன் ஓரளவு வருமானம் ஈட்டுபவர்கள் அந்தப் பணத்தில் ஒரு பகுதியை அரசாங்கத்துக்கு திருப்பிச் செலுத்தும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய பணத்தை மற்றவர்களுக்கு முதலீடு செய்வதன் மூலம் இதுபோன்ற திட்டங்களைச் செய்ய அரசாங்க நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அரச நிறுவனங்கள் பொது நிதியில் தங்கியிருப்பதைத் தவிர்த்து, தமது கட்டுப்பாட்டுக்குத் தேவையான பணத்தை வழங்க வேண்டும் என இளைஞர் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். பல்கலைக்கழகங்கள் மூலம் செய்யப்படும் ஆராய்ச்சிகளைக் கொள்கை வகுப்பாளர்களுடன் இணைப்பது முக்கியம் என்றும் அவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரஜிகா விக்ரமசிங்க மற்றும்  அரசாங்க அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.