கடன் மறுசீரமைப்புக் குறித்து வங்கி வாடிக்கையாளர் எவரும் சந்தேகப்படதேவையில்லை என்கிறார் பிரதமர்
நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களுக்கு 57 மில்லியன் வங்கிக் கணக்குகள் காணப்படுகின்றன. கடன் மறுசீரமைப்பின் மூலம் அந்த அனைத்து வங்கிக் கணக்குகளுக்குமான நம்பிக்கையை நாம் ஏற்படுத்தியுள்ளோம். அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் எவரும் சந்தேகப்படத் தேவையில்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –
தேசிய நெருக்கடி நிலையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சி குறுகிய நோக்கங்களுக்காக செயற்படுவதை விடுத்து பொறுப்புடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விமர்சனங்களுக்கு நாம் எப்போதும் இடமளித்துள்ளோம். என்றாலும் மக்களைத் திசை திருப்பும் எதிர்க்கட்சி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. 57 மில்லியன் வங்கி வாடிக்கையாளர்களை அவர்கள் அச்சத்திற்குள்ளாக்கினர்.
வங்கிகளை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர் அதுவும் கைகூடவில்லை. ஊழியர் சேமலாப நிதி அங்கத்தவர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தை திசை திருப்பும் அவர்களது திட்டமும் பயனளிக்கவில்லை.
அரசாங்கம் என்ற வகையில் நாம் முன்னெடுத்துள்ள இந்த செயற்பாடுகள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் தேசிய வங்கி கட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும். இந்த நடவடிக்கைகளுக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாட்டின் பிரதமர் என்ற வகையில் நான் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.
தற்போது நாட்டில் மூன்று பில்லியன் டொலராக வெளிநாட்டு கையிருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெருமளவு உல்லாச பிரயாணிகள் நாட்டுக்கு வருகை தரும் நிலையில் சுற்றுலாத்துறை மூலமான வருமானம் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தைகளில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் அளவுக்கு எமது வங்கிக் கட்டமைப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எமது வங்கித் துறை சீர்குலைந்திருந்ததை பலரும் மறந்து விட்டனர். எனினும் தற்போது சர்வதேச வங்கிகளுடன் தொடர்புகளை முன்னெடுக்கும் வகையில் அது கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச நாணய நிதியம்,உலக வங்கி மற்றும் எமக்கு உதவும் கடன் வழங்குநர்கள் மற்றும் ஏனைய நாடுகளுடனும் பேச்சு நடத்தி நாம் செயல்படுகின்றோம். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவற்றை வெளிப்படையாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.
நாடு தள்ளப்பட்டிருந்த மோசமான வீழ்ச்சியிலிருந்து அதனை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. மக்களுக்கான வாழ்க்கைச் செலவு அதிகரித்திருந்தாலும் அதற்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் உற்பத்தித் துறைகள் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சீர்குலைந்துள்ள சில நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் கைத்தொழில் துறையில் அரசாங்கத்தின் தலையீடுகள் மேற்கொள்ளப்படும்.
எமது நிதித் துறையில் முக்கிய நிறுவனமாக மத்திய வங்கி செயற்படுகிறது. கடந்த சில வாரங்களாக அந்த வங்கியை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சி மேற்கொண்டு வருகிறது.
மக்களை திசைதிருப்பும் வகையில் பல்வேறு கூற்றுக்களை அவர்கள் முன் வைத்தனர். வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிகளிலிருந்து விலகி விடுவார்கள் என அவர்கள் எதிர்பார்த்தனர். எதிர்க்கட்சி அவ்வாறு செயற்படுகின்றமை தொடர்பில் கவலையடைகிறேன்.
நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களுக்கு 57 மில்லியன் வங்கிக் கணக்குகள் காணப்படுகின்றன. சிறந்த செயற்பாட்டின் மூலம் அந்த அனைத்து வங்கிக் கணக்குகளுக்குமான நம்பிக்கையை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
ஜனாதிபதி,அமைச்சரவை மற்றும் மத்திய வங்கியின் மூலம் அதற்கான உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. போலியாக முன்னெடுக்கப்பட்ட அத்தனை பிரசாரங்களும் காற்றில் அடித்துச் சென்று விட்டன.
அந்த வகையில் அரச வங்கிகளுக்கு மட்டுமன்றி அனைத்து வங்கிகளுக்கும் அரசாங்கம் அந்த நம்பிக்கையை உறுதி செய்துள்ளது. மக்களின் அனைத்து வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்களும் முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்துகிறது. பல்வேறு கூற்றுக்களை முன்வைத்து ஏமாற்று செயற்பாடுகளை எவர் முன்னெடுத்தாலும் அரசாங்கம் வங்கிக் கட்டமைப்புக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது . – என்றார்.
கருத்துக்களேதுமில்லை