கோட்டாபயவுக்குத் தவறான ஆலோசனை வழங்கியது யார்? லன்சா – கொடஹேவா முறுகல்

வியத்மக அமைப்பு ஊடாக கோட்டாபய ராஜபக்ஷவை கொண்டு வந்து அவருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இன்று எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆலோசனை வழங்குகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர்  நிமல் லன்ஷா தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் நாங்கள் ஆலோசனை வழங்கினோம். ஜனாதிபதியான பின்னர் ஆலோசனை வழங்கவில்லை என நாடளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா உரையாற்றியவை வருமாறு –

வியத்கம அமைப்பின் ஊடாக கோட்டாபய ராஜபக்ஷவை கொண்டு வந்து அவருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய நாலக கொடஹேவா இன்று எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆலோசனை வழங்குகிறார்.

தவறான ஆலோசனைகளைக் கேட்டால் எதிர்க்கட்சித் தலைவர் பாரிய அரசியல் நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நேரிடும்.

றாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா கம்பஹா மாவட்ட மக்களைத் தவறாக வழிநடத்தி பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். நேர்ந்தது என்ன? கம்பஹா மக்கள் ஒட்டுமொத்த மக்களையும் வெறுக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு அவர் பொறுப்புக் கூற வேண்டும். – என்றார்.

இதன்போது குறுக்கிட்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா வியத்மக அமைப்பு ஊடாக கோட்டாபய ராஜபக்ஷவை நாங்கள் கொண்டு வந்தோம்.

அவர் ஜனாதிபதி பதவிக்குத் தெரிவாகுவதற்கு முன்னர் ஆலோசனை வழங்கினோம். ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாங்கள் ஆலோசனை வழங்கவில்லை . – என்றார்.

இதன்போது மீண்டும் உரையாற்றிய நிமல் லன்சா கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் வரி சலுகை வழங்குமாறு நீங்கள் தான் (நாலக கொடஹேவாவை நோக்கி) ஆலோசனை வழங்கினீர்கள்.

என்னை குழப்பிக் கொள்ள வேண்டாம். விவாதத்தை நீடித்தால் கப்பல் மூழ்கடித்து கடல் வளத்தை அழித்தமை உள்ளிட்ட பல விடயங்களை வெளிப்படுத்துவேன். – என்றார்.

இதனை தொடர்ந்து மீண்டும் எழுந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா, வரி சலுகை வழங்குமாறு குறிப்பிடும் அதிகாரம் எனக்கு இல்லை நான் நிதியமைச்சர், திறைசேரி செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் என்ற எந்த பதவியையும் வகிக்கவில்லை. ஆகவே வரி சலுகை யார் வழங்கியது என்பது அறிவு உள்ளவர்களுக்கு தெரியும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.