திறைசேரி உண்டியல்களை பிணையங்களாக மாற்றினால் ரூபா கையிருப்பு நெருக்கடியாகும்! சம்பிக்க எச்சரிக்கை
திறைசேரி உண்டியல்களை பிணைமுறியங்களாக மாற்றியமைப்பதால் எதிர்காலத்தில் மத்திய வங்கி ரூபா நெருக்கடியை எதிர்கொள்ளும் அதற்கான தீர்வும் மக்கள் மீதே சுமத்தப்படும்.
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மக்கள் மீது சுமை சுமத்தப்பட்டுள்ளமை கவலைக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
தேசிய மற்றும் சர்வதேச கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை நான் 2016 ஆம் ஆண்டு அமைச்சரவையில் முன்வைத்தேன்.
வங்குரோத்து நிலை அடைந்ததன் பின்னரே கடன்களை மறுசீரமைக்க தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச பிணைமுறியாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் மற்றும் அதிக வட்டி வீதத்தில் பெற்றுக்கொண்ட வணிக கடன்கள் என்பன தற்போதைய நிதி நெருக்கடிக்கு ஒரு காரணியாக உள்ளது.
கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் தேசிய கடன் தவிர்க்க முடியாதது. இருப்பினும் கடன் மறுசீரமைப்பின் போது பொருளாதார வெளிப்பாட்டு கொள்கை சிறந்த முறையில் பின்பற்றப்பட வேண்டும்.
தேசிய கடன்களை மறுசீரமைத்து விட்டோம் என அரசாங்கத்தால் ஓய்வெடுக்க முடியாது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் சர்வதேச அரசமுறை கடன்களை மறுசீரமைத்து இணக்கப்பாட்டு கொள்கை ஒப்பந்தத்தை சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்வைக்க வேண்டும்.
நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி சமர்ப்பித்துள்ள வருமானம் மற்றும் செலவு தொடர்பிலான அறிக்கை முரண்பட்டதாக உள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் கலந்துரையாட தீர்மானித்துள்ளோம்.
2022 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதியன்று உறுதிப்படுத்தப்பட்ட பிணைமுறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆகவே தற்போதைய நிதி தரப்படுத்தலுக்கு அமைய மதிப்பிடப்பட்டுள்ள தொகையில் மாற்றம் ஏற்படும்.
கடன் மறுசீரமைப்பின் சுமை நடுத்தர மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனியார் நிறுவனங்கள் வசமிருந்த 1.5 ரில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்துக்குள் உள்வாங்கப்படவில்லை. மறுபுறம் அவர்கள் வசமுள்ள 5 ரில்லியன் பெறுமதியான பிணைமுறிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவில்லை.
விநியோகிக்கப்பட்டுள்ள திறைசேரி உண்டியல்களை ,பிணைமுறிகளாக மாற்றியமைக்க கடன் மறுசீரமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் உண்டியல்கள் பிணைமுறியங்களாக மாற்றப்பட்டால் மத்திய வங்கி ரூபா கையிருப்பு நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்த சூழலை முகாமைத்துவம் செய்ய ஒன்று பணம் அச்சிட வேண்டும் அல்லது நேரடி மற்றும் மறைமுக வரி அறவிடலை அதிகரிக்க வேண்முத். இரண்டு தீர்மானத்தில் ஒன்றையேனும் நடைமுறைப்படுத்தினால் மக்களே பாதிக்கப்படுவார்கள்.
கடன் மறுசீரமைக்கப்படாமல் இருந்திருந்தால் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கு சுமார் 120 பில்லியன் ரூபா வட்டி கிடைக்கப்பெற்றிருக்கும் அதனை உழைக்கும் மக்களுக்கு பகிர்ந்தளித்திருக்கலாம்.
ஆனால் கடன் மறுசீரமைப்பின் பின்னர் 9 சதவீத வட்டி வீதமே வழங்கப்படும். 2025 ஆம் ஆண்டு முதல் ஈ.பி.எப் நிதியத்தில் இருந்து வருடாந்தம் 60 ஆயிரம் ரூபா இரத்து செய்யப்படும் இதனால் சாதாரண மக்களே மோசமாகப் பாதிக்கப்படுவார்கள்.
பொருளாதாரப் பாதிப்பைத் தீவிரப்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அப்பாவி மக்கள் மீது கடும் சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன.இவை முற்றிலும் தவறானது . – என்றார்.
கருத்துக்களேதுமில்லை