கவனவீனம் உயிர்களை காவு கொண்டுள்ளது: உறவுகளின் மறைவு மிகுந்த வேதனையளிப்பு! ஹரீஸ் எம்.பி இரங்கல்
நூருல் ஹூதா உமர்
பொடுபோக்குகள், கவனவீனம் காரணமாக அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்து கொண்டே போகின்றன. அதன் தொடர்ச்சியாக ஞாயிறு இரவு கதுறுவெலையிலிருந்து பயணித்த தனியார் பஸ், மன்னம்பிட்டி, கொட்டலிய பாலத்தில் விபத்துக்குள்ளாகி ஆற்றில் விழுந்ததால் 10 இற்கும் அதிகமானவர்கள் மரணித்த விடயம் எல்லோருக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது என ஸ்ரீ ல.மு.கா பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அறிக்கையொன்றினூடக தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு –
மேற்படி பகுதியில் தொடர்ந்தும் விபத்துக்கள் நடைபெறுவதை அறிந்தும் பொடுபோக்காக சாரதிகள் தொடர்ந்தும் வாகனங்களை கண்மூடித்தனமாக செலுத்துவது உயிர்களுடன் விளையாடுவதாகவே அமைந்து விடுகிறது. இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், குடும்பஸ்தர்கள், பெண்கள் என குறித்த விபத்தில் காலமான அத்தனை உயிர்களும் பெறுமதியானது. இவர்களின் இழப்பு அவர்களின் குடும்பத்தினது இழப்பு மட்டுமல்ல இந்த நாட்டின் இழப்பாக அமைந்துள்ளது.
ஆசனங்களுக்கு மேலதிகமான பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்களைச் செலுத்திச் செல்லும் சாரதிகள் அவர்களது வாகனத்தில் பயணிக்கும் ஒவ்வொரு உயிரும் பெறுமதியானது என்பதை அறிந்துகொண்டு வாகனத்தை செலுத்த வேண்டும். இப்படியான விபத்துக்களுக்கு வாகன உரிமையாளர்கள், சாரதிகள் மட்டுமன்றி பாராமுகமாக இருந்த அதிகாரிகளும் பொறுப்புக் கூற வேண்டும்.
இந்த விபத்தில் காலமான அத்தனை எனது உறவுகளுக்கும் எல்லாம் வல்ல இறைவன் நல்ல நிலையை வழங்க பிரார்த்திப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்பவும் பிரார்த்திக்கிறேன். விபத்தில் காலமானவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை