அதிகாரத்தை வைத்திருந்தும் ஒன்றும் செய்யாத ரவூப் ஹக்கீம் இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்! ஐக்கிய காங்கிரஸ் சாட்டை
நூருல் ஹூதா உமர்
கதுருவெல வாகன விபத்துக்கு துக்கம் தெரிவித்துள்ள ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்படி பாலத்தை திருத்துவதில் அரசாங்கம் பொடுபோக்காய் இருந்துள்ளதாக குறை கூறியுள்ள நிலையில் கிழக்கு மக்களை இணைக்கும் இப்பாலத்தை மைத்திரியின் அமைச்சரவையில் ஹக்கீம் குந்திக் கொண்டிருக்கும் போது திருத்த முயற்சிக்காமல் இருந்து விட்டு இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றார் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்தப் பாலம் என்பது இன்று நேற்று போட்ட பாலம் அல்ல. பல தசாப்தங்களாக இப்படித்தான் உள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தையும் இணைக்கும் பாலங்கள் பிரித்தானியரின் ஆட்சியில் போடப்பட்டு அண்மை வரை அவை ரயிலும் வாகனங்களும் செல்லும் பாலங்களாகவே இருந்து வந்தன. இதன் காரணமாக வாகன பயணிகள் பல காத்திருப்புக்களை சந்தித்தனர்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவே இப்பாலங்களின் பிரதான, நீண்ட பாலங்களை தனி வீதிகளாகப் புனரமைத்து வாகனங்கள் மட்டும் செல்லும் பாலங்களாக மாற்றியமைத்தார். இதில் மன்னம்பிட்டி, ஓட்டமாவடி பாலங்களும் அடங்கும். மேற்படி விபத்து நடந்த சிறிய பாலம் அகலமாக்கப்படவில்லை. பொலன்னறுவையை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால கூட இதை திருத்த அக்கறை கொள்ளவில்லை.
ஆனாலும் கிழக்கு மாகாண மக்களின் அதிக பட்ச வாக்குப்பெற்ற கட்சியின் தலைவராகவும் அந்த வாக்குகள் காரணமாகவும் மைத்திரியின் அமைச்சரவையில் பதவியை பெற்றிருந்த ரவூப் ஹக்கீமாவது இந்தப்பாலத்தை திருத்தும்படி மைத்திரிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. நல்லாட்சியின் போது இப்பாலத்தில் மருதமுனையை சேர்ந்த ஒரு வைத்தியரின் வாகனம் விழுந்து அவரின் குடும்பம் மரணித்த நிலையிலும் மருதமுனை மக்களின் அதிக வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இந்தப் பாலத்தை திருத்த எந்தவொரு அழுத்தத்தையும் அரசுக்கு கொடுக்காமல் நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் தூங்கிவிட்டு இப்போது திடீரென முழித்துக்கொண்டு அரசாங்கத்தை குறை கூறுகிறார்.
ஆகவே இந்த விபத்துக்கான முழு பொறுப்பையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் அவரது அமைச்சில் குந்திக்கொண்டிருந்த ரவூப் ஹக்கீமுமே பொறுப்பேற்க வேண்டும் என்பதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெளிவாக சொல்லிக்கொள்கிறது.
கருத்துக்களேதுமில்லை