அம்பாறையில் தேரர் தாக்கப்பட்ட சம்பவம்: தாக்கியவர்களை ஏன் கைதுசெய்யவில்லை?   பொலிஸாரை கேட்கிறார் விமலவீர திஸாநாயக்க

போராட்டத்தில் பங்கேற்பதற்கு சென்றவர்களுக்கு அறிவுரை கூறியதன் பின்விளைவே தேரர் மீதான இந்தத் தாக்குதலாகும். எனினும், தாக்குதல் மேற்கொண்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலிஸார் இருக்கின்றனர். இதனால் எமது நாட்டின் சட்டம் எங்கே செல்கிறது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது என விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விமலவீர திஸாநாயக்க, அம்பாறையில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் –

கடந்த ஜூலை 10 ஆம் திகதி மாலை 7 மணியளவில் அம்பாறை மாவட்டம் தமண பிரதேச செயலகத்துக்குட்பட்ட பௌத்த விகாரை ஒன்றின் தேரர் ஒருவர் சிலரால் தாக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்த தேரர் மீது ஐவர் கொண்ட குழு தாக்குதல் மேற்கொண்டிருந்ததாக அறிய முடிகிறது. தற்போது தாக்குதல் இடம்பெற்று 6 நாளகள் கடந்தும் கூட பொலிஸாரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தேரரை தாக்கியவர்கள் எனக் கூறப்படுபவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இவர்களுக்கு அரசியல் புலம் உள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தேரர் அப்பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கு சென்றவர்களுக்கு அறிவுரை கூறியமையே தேரர் மீதான தாக்குதலுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. பொலிஸார் இந்த விடயத்தில் அமைதியாக இருக்கின்றனர்.

இதில் தமண பொலிஸ் பொறுப்பதிகாரி பொறுப்புக்கூற வேண்டியவர் ஆவார். எனினும், அவர் பாரபட்சமாக உள்ளார் என்றே மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலிஸார் இருக்கின்றனர்.

எமது நாட்டின் சட்டம் எங்கே செல்கின்றது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது.

தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் 2 பேரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக பிந்திய தகவல் கிடைத்தது.

ஆனால், இந்தத் தாக்குதல் விடயத்தில் பக்கச்சார்பாக பொலிஸார் நடப்பதை ஏற்கமுடியாது. இந்த விடயத்தைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. மக்கள் போராட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவே இந்த விடயத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.