ராஜபக்ஷர்களை தூய்மைப்படுத்தும் தெரிவுக்குழுவைப் புறக்கணிப்போம்! அநுரகுமார போர்க்கொடி
பொருளாதாரப் பாதிப்புக்கு கப்ரால், பஷில், மஹிந்த ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழு அமைத்துள்ளமை வழக்கு விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ராஜபக்ஷர்களை தூய்மைப்படுத்தும் தெரிவுக்குழுவில் நாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கண்டி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
நாடு ஏன் வங்குரோத்து நிலை அடைந்தது, அதற்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். வங்குரோத்து நிலை இயற்கையாகவே தோற்றம் பெற்றது என்பதைக் காண்பிப்பதற்காக நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய நாடாளுமன்றத்தில் சாகர காரியவசம் தலைமையில் விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த தீர்மானங்களால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. இவ்வாறான நிலையில் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெரிவுக்குழு நடுநிலையாக உண்மையுடன் செயற்படுமா என்பது சந்தேகத்துக்குரியது.
பொருளாதாரப் பாதிப்புக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ராஜபக்ஷர்களைத் தூய்மைப்படுத்தும் நோக்கத்தில் சாகர காரியவசம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தெரிவுக்குழு பயனற்றது. ஆகவே மக்கள் விடுதலை முன்னணி இந்த பயனற்ற செயற்பாட்டில் பங்குகொள்ளாது. நாங்கள் தெரிவுக்குழுவை புறக்கணிப்போம். தேர்தலை நடத்தினால் மக்கள் நீதிபதிகளாக இருந்து தீர்ப்பு வழங்குவார்கள். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை