அனைத்து சுகாதார மருந்துகளும் மீள ஆய்வுக்குட்படுத்த வேண்டும்! சுகாதார தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு வலியுறுத்து
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 500 இற்கும் அதிகமான மருந்துகள் பதிவுகளுக்கு அப்பால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மருந்துகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வாக பதிவு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட அனைத்து மருந்துகளும் மீண்டும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
குழுவொன்றை நியமிக்கும் போது கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு சுகாதாரத்துறையினர் சில கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்கின்றனர்.
ஒவ்வாமை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இலங்கையில் ஒவ்வாமை தொடர்பில் சுகாதார துறையில் நிபுணத்துவம் பெற்ற எவரும் இல்லை.
நாம் அறிந்த வகையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில் இவரை போன்ற நிபுணத்துவம் பெற்ற ஒருவரின் பங்களிப்பு இந்த குழுவில் இருக்க வேண்டும்.
ஏனெனில் தற்போது இந்த பிரச்சினை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். எனவே நோயாளர்களின் தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்க வேண்டிய ஒருவர் இந்த குழுவில் இருக்க வேண்டியது அவசியமாகும் என்பதை ஜனாதிபதிக்கும், அமைச்சருக்கும் யோசனையாக முன்வைக்கிறோம்.
அரசாங்கம், ஜனாதிபதி, சுகாதார அமைச்சு, அமைச்சர் இந்த நேரத்தில் நோயாளர்கள் சார்பில் இருக்க வேண்டுமேதவிர நிறுவனத்துக்கு சார்பாகவும், இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பில் பக்கச்சார்பான அறிக்கைகளில் அல்ல. மருந்து தொடர்பில் ஆழமான ஆய்வு மேற்கொள்ளப்படும்.
கடந்த வருடத்தில் மாத்திரம் மருந்துகளுக்கு சாதாரண பதிவுகளின்றி 174 மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.இந்த வருடம் மாத்திரம் 500 இற்கும் அதிகமான மருந்துகள் பதிவுகளுக்கு அப்பால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
தற்போது இந்த மருந்துகள் வைத்தியசாலைகளில் உள்ளன. இந்த மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன. மருந்து பிரச்சினைக்கு தீர்வாக பதிவு செய்யப்பட்டதாக கூறி கொண்டு வரப்பட்ட மருந்துகள் ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை