காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் கோரிக்கை நியாயம்! ஏற்றுக்கொள்கிறார்  பவித்திரா

வடக்கு , கிழக்கிலுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானவையாகும். அப்பகுதிகளில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வன வள பாதுகாப்பு திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் அவை நிச்சயம் விடுக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி உறுதியளித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் –

1980ஆம் ஆண்டுகளின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பாலான மக்கள் தமக்கு உரிமமுடைய காணிகளை கைவிட்டுச் சென்றுள்ளனர். அதன் பின்னர் 30 ஆண்டுகளின் பின்னர் இவை காடுகளாகியுள்ளன. இவற்றில் தொடர்ந்தும் வன வள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் வைத்திருக்க வேண்டிய காணிகளும் உள்ளன. மேலும் பல காணிகள் உண்மையில் 1985 இல் உரிமம் காணப்பட்ட மக்களின் இடங்களாகும்.

எனவே யுத்தம் காரணமாக தம்மால் கைவிட்டுச் செல்லப்பட்ட தமது மூதாதையரின் காணிகளை விடுவிக்குமாறு அந்த மக்களால் விடுக்கப்படும் கோரிக்கைகள் நியாயமானவையாகும். எவ்வாறிருப்பினும் அவை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வன வள பாதுகாப்பு திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையிலுள்ளன. எனவே இது தொடர்பில் விரிவான தகவல்களை வெளிப்படுத்த முடியாது. எவ்வாறிருப்பினும் மக்களுக்குரிய காணிகள் நிச்சயம் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாவுள்ளோம். அரசாங்கமும் அதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.